சித்தேரி மலைப்பகுதியில் உள்ள ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு : கறந்த பாலை விநியோகம் செய்ய முடியாமல் தவித்த கிராம மக்கள் : இரண்டு நாட்களுக்குப் பின்பு ஆபத்தான முறையில் பால் கேன்களை கயிறு கட்டி எடுத்துச் செல்லும் மலைவாழ் மக்கள்.

பெஞ்சல் புயல் காரணமாக தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள சித்தேரி மலைப் பகுதியான அரசநத்தம் கலசப்பாடி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளிலும் ஆங்காங்கே கன மழை பெய்தன. இதனால் மலை குன்றுகளில் காட்டாற்று வெள்ளம் உருவாகி கலசப்பாடி ஆற்றில் திடீரென தண்ணீர் பெருக்கெடுத்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் இந்த காட்டாற்று வெள்ளத்தால் அரசநத்தம், கலசப்பாடி, அக்கரைக்காடு கோட்ட வளவு உள்ளிட்ட 10 மலை கிராமங்களுக்கு செல்லக்கூடிய மக்கள், ஆற்றைக் கடந்து தகுந்த நேரத்திற்கு செல்ல முடியாமல் தவித்து வந்தநிலையில் ஆற்றைக் கடக்க ஆற்றின் நடுவே கயிறு கட்டியும் மக்களின் உதவியுடன் ஆபத்தான முறையில் ஆற்றைக் கடந்து சென்றனர்.
குறிப்பாக கலசப்பாடி அரசநத்தம் உள்ளிட்ட கிராம பகுதிகளில் ஏராளமான கால்நடை வளர்க்கும் விவசாயிகள் பாலை கறந்து அதனை கேன்களில் இருசக்கர வாகனத்தில் கொண்டு வந்து மலையின் தரைப்பகுதியில் உள்ள மாளகாப்பாடியில் உள்ள பால் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்வது வழக்கம், தற்போது ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கறந்த பால் வீணாகிவிடும் என எண்ணிய விவசாயிகள் நலுக்கு பாறை எனும் இடத்தில் ஆற்றின் நடுவே கயிறை கட்டி கயிற்றின் மூலமாக ஆற்றைக் கடந்து சுமார் 3,500 லிட்டர் கொள்ளளவு கொண்ட பாலை பால் கொள்முதல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
மழைக்காலங்களில் இது போன்ற காட்டாற்று வெள்ளம் உருவாகி ஆற்றில் செல்வதால் அவ்வப்போது கிராம மக்கள் குடியிருப்புகளுக்கு செல்ல முடியாமல் தவித்து வருவதாகவும், எங்கள் கிராமத்திற்கு பாலம் அமைத்துக் கொடுத்தால் ஆற்றில் தண்ணீர் செல்லும் பொழுது ஆற்றைக் கடந்து செல்ல சுலபமாக இருக்கும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து பலமுறை ஆட்சியர் இடமும், அரசு அதிகாரிகளிடமும் மனு அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை என வேதனை தெரிவித்து வருகிறார் கிராம மக்கள்.
