பா.ஜ.க மாவட்ட தலைவர் தரணி முருகேசன் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்-பா.ஜ.க நிர்வாகியின் சமூக வலைதள வீடியோவால் பரபரப்பு.

ராமநாதபுரம் மாவட்டத்தில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து பா.ஜ.க மகளிர் அணி சார்பில் மதுரையில் இருந்து சென்னையை நோக்கி விழிப்புணர்வு பேரணியாக செல்லவிருந்தனர்.அந்தப் பேரணியில் கலந்து கொள்வதற்காக ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க மகளிர் அணியினர் கேணிக்கரை நான்கு ரோடு சந்திப்பில் இருந்து கிளம்ப தயாராக இருந்தனர்.அப்போது அங்கு வந்த கேணிக்கரை போலீசார் அந்தப் பேரணியில் கலந்து கொள்ள அனுமதி இல்லை எனவும் இங்கிருந்து கிளம்பி சென்றால் உங்களை கைது செய்வோம் எனவும் கூறினர்.காவல்துறையினரின் பேச்சை மீறி பேரணியில் கலந்து கொள்வதற்காக தயார் நிலையில் இருந்த வாகனத்தில் ஏற முற்பட்ட பா.ஜ.க மகளிர் அணி நிர்வாகிகளை வழியனுப்ப வந்த மாவட்ட தலைவர் தரணி முருகேசன் தலைமையிலான நிர்வாகிகள் 8 பேரையும் கேணிக்கரை போலீசார் கைது செய்தனர்.இதில் பா.ஜ.க மகளிர் அணி நிர்வாகிகளை காவல்துறையினர் வாகனத்தில் ஏற்றும் போது சேலையில் கை பட்டு இழுத்ததால்,இதனை தட்டிக் கேட்ட பாஜக அரசு தொடர்பு பிரிவு மாவட்ட செயலாளர் சண்முகநாதன் என்பவர் அங்கிருந்த காவல்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.வாக்குவாதம் முற்றிய நிலையில் காவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்தது பெண் காவல்துறை சார்பு ஆய்வாளரிடம் அத்துமீறி நடந்து கொண்டது என்பது உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் கேணிக்கரை போலீசார் சண்முகநாதன் மீது வழக்குப்பதிவு செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

இதனைக் கண்டித்து ராமநாதபுரம் பா.ஜ.க அலுவலகத்தில் மாவட்ட தலைவர் தரணி முருகேசன் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் காவல்துறை திட்டமிட்டு ஜோடித்து 5 பிரிவுகளின் கீழ் எங்கள் கட்சி நிர்வாகி சண்முகநாதன் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.இதனை மாவட்ட பா.ஜ.க சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.

மேலும் இந்த விவகாரத்தில் காவல்துறை கஞ்சா விற்பவர்களுக்கும்,கடத்தல் காரர்களுக்கும் துணை நின்று இந்த பொய் வழக்கை பதிவு செய்துள்ளது. இதனை கண்டிக்கும் விதமாக தேசிய மனித உரிமை ஆணையத்திலும், நீதிமன்றம் மூலமும் வழக்கு தொடர்ந்துள்ளோம்.மேலும் பொய் வழக்கு பதிவு செய்த காவல்துறையினரை கண்டித்து ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க சார்பில் தொடர் கண்டன ஆர்ப்பாட்டத்தையும் நடத்த உள்ளோம்.இவ்வாறு அவர் தெரிவித்து இருந்தார்.

இதனை அடுத்து காவல்துறையின் மீது கலங்கத்தை ஏற்படுத்தும் விதமாக பேசிய ராமநாதபுரம் பா.ஜ.க மாவட்ட தலைவர் தரணி முருகேசன் போலீசார் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மீது முன்னாள் சார்பு ஆய்வாளராக இருந்து பணி ஓய்வு பெற்று தற்போது பா.ஜ.க அரசு தொடர்பு துறை மாவட்ட தலைவராக இருந்து வரும் முனியசாமி இணையத்தில் வெளியிட்ட வீடியோவால் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அந்த வீடியோவில் காவல்துறையினர் பேரணிக்கு அனுமதி மறுத்ததை முன்னரே பா.ஜ.க மாவட்ட தலைவர் தரணி முருகேசனுக்கு சம்மன் மூலமாக தெரிவித்தும்,காவல்துறையினரை அவமதித்து பேரணியில் கலந்து கொள்ள செல்வதற்காக முற்பட்ட கட்சி நிர்வாகிகளை காவல்துறையினர் கைது செய்தனர்.இதில் காவல்துறையினரை குற்றம் சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாது.ஏனென்றால் காவல் துறை அனுப்பிய சம்மனில் பா.ஜ.க மாவட்ட தலைவர் தரணி முருகேசன் கையெழுத்திட்டுள்ளார்.அதனை மீறி பேரணியில் கலந்து கொள்ள முற்பட்டதால் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.பா.ஜ.க அரசு தொடர்பு துறை மாவட்ட செயலாளர் என தன்னை கூறிவரும் சண்முகநாதன் என்பவரை அந்த துறையின் மாவட்ட தலைவர் என்ற அடிப்படையில் அவரது ஒழுங்கீன நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு பொறுப்பிலிருந்து நான் நீக்கி விட்டேன்.சண்முகநாதன் என்பவர் கூட்டத்தில் நடந்து கொண்ட ஒழுங்கீனத்தால் காவல்துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதில் காவல்துறை கஞ்சா விற்பவர்களுக்கும் கடத்தல் காரர்களுக்கும் துணை போகிறது என தரணி முருகேசன் கூறியிருக்கிறார்.அதை அவர் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க வேண்டும்.கட்சி பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட சண்முக நாதனை அனுமதி இல்லாத பேரணிக்கு அழைத்து வந்தது முதல் தவறு.அங்கு பணியில் இருந்த பெண் காவல் சார்பு ஆய்வாளரிடம் சண்முகநாதன் நடந்து கொண்ட விதம் இரண்டாவது தவறு.இப்படி தவறு எல்லாவற்றையும் தங்கள் மீது வைத்துக் கொண்டு செய்தியாளர்களை அழைத்து காவல்துறையின் மீது களங்கம் சுமத்தும் தரணி முருகேசன் மீது மாவட்ட காவல்துறை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.அவ்வாறு மாவட்ட காவல்துறை நடவடிக்கை எடுக்க விட்டாலும் நான் எனது சொந்த பொறுப்பில் தேசிய மனித உரிமை ஆணையத்திலும் நீதிமன்றத்திலும் தரணி முருகேசன் மீது காவல்துறையினரை அவமதித்து பேசியதாக வழக்கு தொடர்வேன். இதனால் என்னை பா.ஜ.க கட்சியில் இருந்து நீக்கினாலும் அதனை ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளேன்.

இவ்வாறு அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.