ஜனவரி மாதம் முழுவதும் சாலை பாதுகாப்பு மாதமாக அனுசரிக்கப்பட்டு வருவதையொட்டி தமிழக முழுவதும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை அருகே போக்குவரத்து காவல்துறையினர் சார்பில் சாலை பாதுகாப்பு குறித்து இருசக்கர விழிப்புணர்வு பேரணியை பென்னாகரம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் செல்வமணி ஏற்பாட்டில் பென்னாகரம் காவல் துணை கண்காணிப்பாளர் மகாலட்சுமி தலைமையில் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த இருசக்கர பேரணியானது பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை அருகே இருந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வழியாக பழைய பேருந்து நிலையம், கடைவீதி, வட்டாட்சியர் அலுவலகம், போடூர் நான்குரோடு, அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளி பகுதி வரை சென்றடைந்தது. இப்பேரணியில் தலைக்கவசம் அணிய வேண்டும், இரு சக்கர வாகனத்தில் இருவர் மட்டுமே பயணிக்க வேண்டும், ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனங்களை இயக்கக் கூடாது, வாகனங்களை அதிவேகமாக இயக்கக் கூடாது, மது அருந்திவிட்டு வாகனங்களை இயக்கக் கூடாது, கனரக வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் செல்லக் கூடாது போன்ற விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் வகையில் 170 க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் மூலம் பொதுமக்களுக்கு காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதில் ஏரியூர் காவல் ஆய்வாளர் சுரேஷ் ஒகேனக்கல் காவல் ஆய்வாளர் முரளி போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் சின்னசாமி,மணிமாது மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் பென்னாகரம் காவல் நிலைய உட்கோட்டத்திற்கு உட்பட்ட காவலர்கள் மற்றும் இருசக்கர வாகன பழுது நீக்கும் ஊழியர்கள் இருசக்கர வாகன ஓட்டிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
