கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் பெஞ்சல் புயல் காரணமாக வரலாறு காணாத மழை பெய்ததால், பொது மக்கள் பாதிப்பு

பெஞ்சல் புயல் கடந்த 23ம் தேதி பெருங்கடல் பகுதியில் உருவாகி கடந்த 29ம் தேதி மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே கரையை கடந்தது. பின்னர் பாண்டிச்சேரி, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை வழியாக நேற்று இரவு போச்சம்பள்ளி அதன் சுற்று வட்டார பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து நேற்று இரவு முழுவதும் தொடர்ந்து கன மழை பெய்தது. இதன் காரணமாக போச்சம்பள்ளி சுற்று வட்டார கிராமத்தில் உள்ள ஏரிகளான கோணனூர் ஏரி, திப்பனூர் ஏரி, ஜிம்மாண்டியூர் ஏரி, அங்கம்பட்டி ஏரி, மேக்கலாம்பட்டி ஏரி உள்ளிட்ட பெரும்பாலான ஏரிகள் நிரம்பி, கோடிக்கரை வழியாக மழைநீர் வெளியேறியது.

கோணனூர் ஏரி நிரம்பி அதிகாலை முதல் தண்ணீரை வெளியேறியதால் போச்சம்பள்ளி காவல் நிலையம் முற்றிலும் நீரில் மூழ்கியது. காவல் நிலையத்தில் இருந்த காவலர்கள் பொது மக்களால் பத்திரமாக மீட்கப்பட்டனர். அதேபோல் பிரபல செய்தி தாள் மூத்த நிருபர் மனோகரன் அவர்களின் வீடு முழுவதும் தண்ணீரால் அடித்து செல்லப்பட்டது. வீட்டிலிருந்த தட்டுமுட்டு சாமான்கள் முதல் அவரது அனைத்து ஆவணங்களும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது.

அதேபோல் ஜிம்மாண்டியூர் ஏரி நிரம்பி தண்ணீர் வெளியேறியதால் சந்தூர்- போச்சம்பள்ளி சாலை முற்றிலும் துண்டிக்கப்பட்டது. ஜிம்மாண்டியூர் ஏரியிலிருந்து வெளியேறிய தண்ணீர் திப்பனூர் ஏரி சென்றடைந்து அதிலிருந்து வெளியேறிய தண்ணீர், கீழ்மைலம்பட்டி, அங்கம்பட்டி, வசந்தபுரம், இந்திராபுரி ஆகிய ஊருக்குள் புகுந்தது. வீட்டிற்குள் புகுந்த தண்ணீரால் பொது மக்கள் பெருமளவு பாதிப்படைந்தனர். ஊராட்சி தலைவர் எஸ்.ரங்கநாதன் மற்றும் கவுன்சிலர் ராஜா ஆகியோர் டிராக்டர் மூலம் கிராமங்களுக்கு சென்று பாதிக்கப்பட்ட பொது மக்களை டிராக்டர் மூலம் மீட்டு நிவாரன பகுதிகளுக்கு கொண்டு வந்தனர். பின்னர் பாதிக்கப்பட்ட நான்கு கிராமங்ளுக்கும் உணவு சமைத்து அவரவர் வீடுகளுக்கே டிராக்டர் மூலம் சென்று உணவு கொடுத்தார். திப்பனூர் ஏரியிலிருந்து அதிக அளவு வெளியேறிய நீரால் போச்சம்பள்ளி நீதிமன்ற முழுவதும் மூழ்கியது. நீதிமன்றத்திற்கு எதிரே தருமபுரி-திருப்பத்தூர் நெடுஞ்சாலையில் தண்ணீர் ஆர்பரித்து சென்றதால் அதிகாலை முதல் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. வேலைக்கு செல்லும் பணியாட்கள் பேருந்தில் இருந்து இறங்கி இடுப்பளவு நீரில் நடந்து மறுபக்கம் சென்று மாற்று பேருந்தில் சென்றனர். இதன் காரணமாக சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அதேபோல் மேக்கலாம்பட்டி ஏரி நிரம்பி தண்ணீர் வெளியேறியதில் மேக்கலாம்பட்டி கிராமத்தை சேர்ந்த முத்துவேல் (49) என்பவரது வீடு முற்றிலும் தண்ணீரில் மூழ்கியது. இவரது 2 லட்சம் மதிப்புள்ள காளான் பண்ணை, 30 ஆயிரம் மதிப்புள்ள நெல் மூட்டைகள், 30 ஆயிரம் மதிப்புள்ள வைக்கோல் போர் ஆகியவை தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. வாழ்வாதாரம் இன்றி இருக்கும் முத்துவேல் பெஞ்சல் புயல் தாக்கத்தை பேரிடராக அறிவித்து பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்.
பெஞ்சல் புயல் போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதிகளை புறட்டி போட்டதை அறிந்த அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, போச்சம்பள்ளி தனியார் மண்டபத்தில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அதன் பிறகு வந்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனியார் மண்டபத்தில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
