திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகா மணலூர் ஊராட்சி மங்கலம் கிராமத்தில் அருள்மிகு கைலாசநாதர் சுவாமி கோயிலில் கும்பகோணம் ஜோதிமலை இறைப்பணி திருக்கூட்டம் நிறுவனர் தவத்திரு திருவடிக்குடி சுவாமிகள் தரிசனம் செய்தார். அப்பகுதியில் சிவனடியார் மோகன் முயற்சியால் பனை விதைகள் சேகரிக்கப்பட்டு விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகர் வடிவம் செய்து வழிபாடு செய்யப்பட்ட பனை விதைகள் தற்போது ஏரிகள், குளக்கரைகள் மற்றும் சாலை ஓரங்களிலும் பொது நலன் கருதி நடவு செய்யப்பட உள்ளது. இன்று கிராம மக்களுடன் இணைந்து பனை மரத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக திருவடிக்குடில் சுவாமிகள் பனை விதைகளை நடவு செய்து தொடங்கி வைத்தார்கள். மங்களம் கிராமத்தில் குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி தீபாவளி வாழ்த்துகளை பகிர்ந்து கொண்ட சுவாமிகள் தெரிவித்ததாவது :- கும்பகோணம் ஜோதி மலை இறைப் பணி திருக்கூட்டத்தின் சார்பு அமைப்பான விமோசனம் இயக்கம் மூலமாக மதுவுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரங்கள் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக மது இல்லாத தீபாவளி கொண்டாட வலியுறுத்தி விழிப்புணர்வு பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகிறோம். தீபாவளி பண்டிகையில் மது அருந்தி களித்து வீண் செலவுகள் செய்யாமல், நம்மால் இயன்றவரை நம் அருகில் உள்ள ஏழை எளியோர் மற்றும் இயலாதவர்களுக்கு அன்பு பரிமாற்றமும் பொருளாதார உதவிகளையும் செய்வதே மனநிறை நிறைவளிக்கும் கொண்டாட்டமாகும். சமூகத்துக்கு தேவையான எவ்வளவோ பணிகள் தேக்கமடைந்துள்ளன, நாம் சிந்தித்தால் பனை நடவு, நீராதாரத் தூய்மை, மது ஒழிப்பு போன்ற ஆக்கபூர்வமான பணிகளை செய்ய முடியும். கொண்டாட்டம் என்பது சமூகத்தை உயர்த்துவதாக இருக்க வேண்டும். மது போதை பயன்பாடு என்பது சமூக சீரழிவு, இதை குறிப்பாக இன்றைய இளைஞர்கள் உணர்ந்து செயல்பட்டால் எதிர்வரும் சமூகம் செம்மையான சமூகமாக மாற வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்தார்.
வலங்கைமான் அருகே உள்ள மங்கலம் கிராமத்தில் இறைபணி திருக்கூட்டம் சார்பில் நிறுவனர் தவத்திரு திருவடிக்குடில் சுவாமிகள் பனை விதை நடவு செய்தார்.
