ராமநாதபுரம்,நவ.25:-

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்த கன மழையினால் சக்கரக்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட பிரதான பகுதிகளில் மழைநீருடன், கழிவு நீரும் சேர்ந்து பொதுமக்களுக்கு பல விதமான நோய்த்தொற்று ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க தொடர்ந்து மெத்தனம் காட்டி வருவதால் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுகாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.ஊராட்சித் தலைவரின் பதவிக்காலம் முடியும் தருவாய் என்பதாலும்,ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்க அரசு திட்டமிட்டுள்ளதாலும் ஊராட்சி நிர்வாக மானாது பொதுமக்கள் மீது அக்கறை காட்டுவதில் ஆமை வேகத்தில் செயல்படுவதாகவும் இப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளனர்.

இது குறித்து சக்கரக்கோட்டை பஞ்சாயத்து பொதுநலச்சங்க தலைவர் எம்.சி.வெற்றிவேல் நமது “நீதி வெல்லும்”இணையதளத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியதாவது:-
ராமநாதபுரம் மாவட்டம் சக்கரக்கோட்டை ஊராட்சி முழுவதும் உள்ள காலி இடங்களில் மழை நீருடன், கழிவு நீரும் தேங்கி கிடக்கிறது.அதனால் அனைத்து விதமான கிருமி நோய்களும் பரவுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.ஆகவே பொதுமக்கள் அனைவரும் தங்களுடைய குழந்தைகள் தங்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள் அனைவரையும் பாதுகாத்துக் கொள்ள தங்கள் வீட்டைச் சுற்றி பிளிச்சிங் பவுடரை தெளித்து விடவும்.வீட்டைச் சுற்றி கிடக்க கூடிய பயன்படுத்த முடியாத பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் ஏனைய கழிவு பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்திக் கொள்ளவும்.ஏனென்றால் நாமே நாம்மை பாதுகாத்துக் கொள்ளக் கூடிய சூழல் தற்போது உள்ளது.காலி இடங்களில் கிடக்கக்கூடிய கழிவு நீர் மற்றும் மழை நீரால் கிருமிகள் உருவாகாமல் இருக்க வேண்டுமென்றால் சுகாதாரத்துறை அறிவுறுத்தல் மூலம் ஊராட்சி நிர்வாகம் செயல்பட்டால் மட்டுமே நமது பகுதியில் நோய் தொற்றை தவிர்க்க முடியும் தற்போது நமது பகுதியில் சிக்கன் குனியா,டெங்கு மலேரியா போன்ற நோய்கள் வரக்கூடும்.மேலும் நமது நகரை சுற்றி தற்போது எலிகாய்ச்சல் கூட பரவ தொடங்கியுள்ளது.ஆகையால் அதை கவனத்தில் கொண்டு ஊராட்சி நிர்வாகம் செயல்பட்டால் பொதுமக்களை பாதிப்பிலிருந்து காப்பாற்ற முடியும் என்று கேட்டுக் கொள்கிறேன்.மேலும் சாலையை ஒட்டியுள்ள காலி இடங்களில் கிடக்கக்கூடிய தண்ணீரை குறைத்தால் மட்டுமே சாலைகளில் தண்ணீர் தேங்காது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தனது பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார்.
