குதிரை வண்டியில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த அமமுக வேட்பாளர்! திருப்பத்தூரில் வித்தியாசமான தேர்தல் காட்சி!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக வேட்புமனு தாக்கல் மற்றும் வாக்கு சேகரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு (அமமுக) சீட் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரான ஞானசேகர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்ய புறப்பட்டார். இவருடன் கூட்டணி கட்சிகளான பாஜக, பாமக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். வேட்புமனு தாக்கல் செல்லும் இந்த நிகழ்வு வித்தியாசமான முறையில் நடைபெற்றது.

மேலும் பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினரான டி.கே. ராஜா குதிரை வண்டியை ஓட்ட, அதில் வேட்பாளர் ஞானசேகர் அமர்ந்து கொண்டு பொதுமக்களிடம் ‘குக்கர்’ சின்னத்திற்கு வாக்கு கோரி சென்றார். இந்த காட்சி பொதுமக்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்தது.

மேலும், ஊர்வலமாக நடைபெற்ற இந்த நிகழ்வில் சுமார் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு உற்சாகமாக ஆதரவு தெரிவித்தனர். தேர்தல் பரப்புரையில் வித்தியாசமான அணுகுமுறைகள் இடம்பெறுவது, இந்த தேர்தலில் போட்டி கடுமையாக இருப்பதையும் காட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.