
தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாகவே தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. இதற்காக தமிழ்நாடு அரசு கால்நடை துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவை மாநகராட்சியில் தெருநாய்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காகவும், வளர்ப்பு நாய்களை முறைப்படுத்துவதற்காகவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் மாநகராட்சி எல்லைக்குள் உள்ள அனைத்து நாய்களுக்கும் தடுப்பூசி போடுவதை வேகப்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது

. இதற்காக துடியலூர் பகுதியில் தெரு நாய்களுக்கு ரேபிஸ் எதிர்ப்பு தடுப்பூசி போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், கோவை எம்.பி. கணபதி ராஜ்குமார், மாநகராட்சி மேயர் ரங்கநாயகி, மாநகராட்சி ஆணையாளர் சிவகுருபிரபாகரன், வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல், கவுன்சிலர்கள் புஷ்பமணி அருள்குமார், கற்பகம் ராஜ்சேகர் ஆகியோர் தெரு நாய்களுக்கு ரேபிஸ் எதிர்ப்பு தடுப்பூசி போடும் பணிகளை தொடங்கி வைத்தனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு ரேபிஸ் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படும் வகையில் நோட்டீஸ்களை விநியோகம் செய்தனர்.
கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் 11 ஆயிரத்து 17 நாய்களும், கிழக்கு மண்டலத்தில் 24 ஆயிரத்து 404 நாய்களும், மேற்கு மண்டலத்தில் 22 ஆயிரத்து 85 நாய்களும், வடக்கு மண்டலத்தில் 22 ஆயிரத்து 69 நாய்களும், தெற்கு மண்டலத்தில் 31 ஆயிரத்து 499 நாய்களும் உள்ளன. இந்த 5 மண்டலங்களில் சுமார் ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 74 நாய்கள் கண்டறியப்பட்டு கடந்த 2025 ஏப்ரல் மாதம் முதல் வரும் 2026 பிப்ரவரி வரை சுமார் 11 மாதங்களுக்குள் அனைத்து நாய்களுக்கும் ரேபிஸ் எதிர்ப்பு தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக கோவை மாநகராட்சியில் தற்போது நாய்களைப் பிடிக்கும் பணியை மேற்கொள்ள 2 நாய் பிடிக்கும் வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன. ஒவ்வொரு வாகனத்திற்கும் ஒரு கால்நடை மருத்துவர், 2 நாய் பிடிக்கும் பணியாளர்கள், ஒரு ஓட்டுநர் மற்றும் ஒரு உதவியாளர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். நாய் பிடிப்பவர்களுக்கு உரிய பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

நாய்களைப் பிடிப்பதற்காக வலைகள் வழங்கப்பட்டு, அதனைக் கொண்டு நாய்கள் பிடிக்கப்படுகின்றன. மேலும் ஒரு நாளைக்கு 200 நாய்களுக்கு ரேபிஸ் எதிர்ப்பு தடுப்பூசி போடப்படுகிறது என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் கலந்துக்கொண்டனர்.
