
திருவண்ணாமலை மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டங்கள் முதல் கோவில் நிர்வாகம் வரை பல்வேறு துறைகளில் ஊழல் தலைவிரித்தாடுகிறது என பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் A.N.S. பிரசாத் குற்றம்சாட்டினார். மேலும், “திருவண்ணாமலை மாவட்டத்தில் அநியாயம், அக்கிரமம் செய்து ஊழலில் ஈடுபட்டதாக கூறப்படும் அமைச்சர் எ.வ.வேலு தான் முதல் ஊழல் குற்றவாளியாக சிறைக்கு செல்ல நேரிடும்” என அவர் தெரிவித்தார்.
திருவண்ணாமலை அவலூர்பேட்டை சாலையில் அமைந்துள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில், திருவண்ணாமலை வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட பாஜக சார்பில் 2026 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் விளக்க செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் A.N.S. பிரசாத் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், “இது முழுக்க முழுக்க மோடி மாடல் பட்ஜெட். இந்த பட்ஜெட்டில் ஊழலுக்கு இடமில்லை. மத்திய அரசு அறிவிக்கும் திட்டங்களில் திமுக அரசு எந்த வகையிலும் ஊழல் செய்ய முடியாத வகையில் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. பிரதமர் மோடி தமிழகத்திற்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிய போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார். ஆனால் தற்போது ஊடகங்கள் வழியாக பிரதமர் தமிழக மக்களுக்கு என்ன செய்துள்ளார் என்பதை வெளிப்படுத்துவது திமுகவுக்கு ஏற்றுக்கொள்ள முடியாததாக உள்ளது” என்றார்.
மேலும் அவர் கூறுகையில், “மத்திய அரசு வழங்கும் திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தப்படும் இடங்களில் பல இடங்களில் ஊழல் நடைபெறுகிறது. குறிப்பாக திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் 30 சதவீதம் வரை ஊழல் நடைபெறுவதாக தகவல்கள் வருகிறது. திருவண்ணாமலை ஸ்ரீ அண்ணாமலையார் கோவில் நிர்வாகத்திலும் கூட்டாக ஊழல் நடைபெறுகிறது” என குற்றம்சாட்டினார்.
வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் திருவண்ணாமலை மாவட்டத்தில் சட்டமன்ற உறுப்பினரை உருவாக்க வேண்டும் என கூட்டணிக்குள் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். “விரைவில் திருவண்ணாமலை மாவட்டத்தில் தாமரை மலரும். மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்” என நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், “2026 மே மாதத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும். அதில் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருப்பார்” எனவும் அவர் கூறினார்.
அமைச்சர் எ.வ.வேலு குறித்து பேசும்போது, “திருவண்ணாமலை மாவட்டத்தில் அநியாயம், அக்கிரமம் செய்து ஊழலில் தலைவிரித்தாடக்கூடிய அமைச்சர் எ.வ.வேலு தான் முதல் ஊழல் குற்றவாளியாக சிறைக்கு செல்ல இருக்கிறார். இதை நான் தைரியமாக சொல்கிறேன். முடிந்தால் என் மீது வழக்கு போடச் சொல்லுங்கள். நான் ஆதாரங்களை தருகிறேன்” என்று உறுதியாக தெரிவித்தார்.பத்திரிகையாளர் சந்திப்பின்போது உடன் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தலைவர் கே. ரமேஷ் ,வடக்கு மாவட்ட தலைவர் கவிதா சாஸ்தா வெங்கடேசன், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர் கவிதா பிரதிஷ், டி.ஜெய்நாத், மாநிலச் செயற்குழு உறுப்பினர் சாஸ்தா வெங்கடேசன், மாவட்ட துணை தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட இளைஞரணி தலைவர் நவீன், மாநகரச் செயலாளர் மாந்தோப்பு ராஜா, மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்
