ராமநாதபுரம்:சிட்டிங் எம்.பி நவாஸ்கனி மீது பரபரப்பு குற்றச்சாட்டு!!!

ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி மக்கள் கோரிக்கைகளை கண்டுகொள்ளாத நிலையில் எம்.பி நவாஸ்கனி உள்ளதாக எஸ்.டி.பி.ஐ கட்சியினர் குற்றம்சாட்டி உள்ளனர்.

ராமேஸ்வரம் தீவுப் பகுதியில் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படும் தமிழக மீனவர்களின் தாக்குதல் மற்றும் சிறைப்பிடிப்பு உள்ளிட்ட காரணங்களுக்கு எவ்வித குரலோ, போராட்டமோ நடத்தாமல் உள்ளதாக வேதனை தெரிவித்தனர்.

இது குறித்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தலைவர் பெரியபட்டினம் ரியாஸ்கான் கூறியதாவது:-

எம்.பி நவாஸ்கனி தேர்தல் காலத்தில் கூறிய வாக்குறுதிகள் பெரும்பாலானவை நிறைவேற்றப் படாமலே உள்ளன.ஐந்தாண்டு காலம் கடந்த முறை பதவி நிறைவு பெற்ற இரண்டாவது முறையும் ராமநாதபுரம் தொகுதி மக்கள் வெற்றி அடையச் செய்துள்ளனர்.திருமணம் மற்றும் துக்க நிகழ்ச்சிகளிலும்,பல்வேறு வகையான விழாக்களிலும் கலந்து கொள்வது மட்டும் முக்கியமல்ல.பொதுமக்கள் வைக்கக்கூடிய வாழ்வாதார, அத்தியாவசிய கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.ராமேஸ்வரம் பகுதியில் அடிக்கடி தாக்குதலுக்கு உள்ளாகும் மீனவர்களின் பிரச்னைக்கு தீர்வு காண பாராளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும்.அப்பகுதி மக்களை சந்தித்து கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.மண்டபம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வேதாளை ஊராட்சியில் தொடர்ந்து பின்கோடு பிரச்னை நிலவுகிறது.மண்டபம் முகாம் மற்றும் வேதாளைக்கு ஒரே பின்கோடு உள்ளதால் பாஸ்போர்ட் அலு வலகத்தில் அகதிகள் என கேள்வி எழுப்பப்பட்டு மன உளைச்சலுக்கு வேதாளை பகுதி மக்கள் ஆளாகி வருகின்றனர்.ஜமாத் நிர்வாகம் உட்பட சமூக அமைப்புகள் சேர்ந்து எம்.பி நவாஸ்கனியை சந்தித்து மனு கொடுத்தும்,வேதாளைக்கு என தனியாக பின்கோடு வழங்குவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மவுனம் சாதித்து வருகிறார். இவ்விஷயங்கள் குறித்து மத்திய அரசுக்கு கவன ஈர்ப்பு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

எனவே ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு முன்வர வேண்டும்.பிரதிநிதியாக அனுப்பி வைக்கப்பட்ட தங்களின் செயல்பாட்டை முறையாக தொகுதி மக்களுக்கு வலியுறுத்த வேண்டும் என்றார்.