
கோவை காந்திபுரம் பகுதியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அஹல்யா மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்கள் கூறியதாவது..
பிறந்த சில நாட்களிலேயே தீவிரக் குடல் நோயினால் பாதிக்கப்பட்ட பாலக்காட்டைச் சேர்ந்த குழந்தை அமனா, மேல் சிகிச்சைக்காக அஹல்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சாதாரண குழந்தைகளுக்குச் சிறுகுடலின் நீளம் 150 முதல் 180 சென்டிமீட்டர் வரை இருக்கும். ஆனால், குழந்தை அமனாவிற்கு வெறும் 15 சென்டிமீட்டர் மட்டுமே குடல் பகுதி இருந்தது கண்டறியப்பட்டது. இதனால் குழந்தைக்கு உணவிலிருந்து ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச முடியாத இக்கட்டான நிலை ஏற்பட்டது. இதையடுத்து, குழந்தைகள் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் முத்துலிங்கம், நியோனாடாலஜி துறைத் தலைவர் டாக்டர் பத்மேஷ் வடக்கேப்பாட்டு மற்றும் ஆலோசகர் டாக்டர் ரத்னபிரதீப் ஆகியோர் தலைமையிலான குழுவினர் குழந்தைக்கு தீவிரச் சிகிச்சை அளித்து வந்தனர். முழுமையாக உணவை உட்கொள்ள முடியாத குழந்தைக்கு, மத்திய சிரை வழியாக, திரவ ஊட்டச்சத்துக்கள் மட்டுமே வழங்கப்பட்டு வந்தன. கிருமித் தொற்று ஏற்படாதவாறு, தீவிர பாதுகாப்புடன் கடந்த 11 மாதங்களாக என்ஐசியு, செவிலியர் குழு குழந்தையைப் பராமரித்து உயிருக்குப் போராடி வந்த நிலையில், குழந்தையைக் காப்பாற்றப் பொதுமக்கள் நிதி திரட்டல் மூலமாகப் பெற்றோர் நிதி திரட்டினர். நோயின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்டு, துபாயில் பணியாற்றும் பிரிட்டிஷ் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பஸ்ஸாம் ஏ. கலீல் மற்றும் கத்தாரில் பணியாற்றும் டாக்டர் சலீம்மம்மூ ஆகிய உலகப்புகழ்பெற்ற குழந்தைகள் அறுவை சிகிச்சை நிபுணர்கள் இந்தியாவிற்கு நேரில் வரவழைக்கப்பட்டனர்.
அவர்களின் தலைமையில், இந்தியாவில் முதன்முறையாக குடல் நீள விரிவாக்க நவீன அறுவை சிகிச்சை வெற்றிகரமாகச் செய்து முடிக்கப்பட்டது.
தொடர் மருத்துவப் போராட்டங்கள், பெற்றாரின் அசைக்க முடியாத நம்பிக்கை மற்றும் சர்வதேச மருத்துவக் குழுவின் கூட்டு முயற்சியால் குழந்தை அமனா தற்போது முழுமையாக மீண்டு வந்துள்ளார். மருத்துவ உலகின் இந்த அரிய சாதனைக்கு பல தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
நம்பிக்கை மற்றும் மருத்துவத் தொழில்நுட்பத்தின் இணைப்பால் சாத்தியமான இந்தச் சாதனை, பல அரிய நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஒரு புதிய விடியலாக அமைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
