கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள, ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் சார்பாக, இரண்டு நாள் சுகாதார விழிப்புணர்வு கண்காட்சி கோவை ப்ரூக்ஃபீல்டு வணிக வளாகத்தில் நடைபெற்றது..

உலக ஆஸ்துமா தினம் மற்றும் உலக செரிமான ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு, நுரையீரல் மற்றும் இரைப்பை குடல் நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், கோயம்புத்தூர்
ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் இரண்டு நாள் சுகாதார விழிப்புணர்வு கண்காட்சி புரூக்ஃபீல்ட் வணிக வளாகத்தில் தொடங்கியது.
தொடக்க விழாவில் எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் சுந்தர் ராமகிருஷ்ணன், இக்கண்காட்சியை ரிப்பன் வெட்டி துவங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் அறக்கட்டளையின் தலைமைச் செயல் அதிகாரி சி.வி ராம்குமார், தலைமை நிர்வாக அதிகாரி மகேஷ்குமார், ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் டாக்டர் ராஜகோபால், மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் அழகப்பன், இணை மருத்துவக் கல்லூரியின் முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து இக்கண்காட்சி குறித்து எஸ்என்ஆர் அறக்கட்டளையின்
நிர்வாக அறங்காவலர் டாக்டர் சுந்தர் ராமகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது..
மருத்துவமனையின் எல்லைகளைத் தாண்டி, பொதுமக்கள் அதிகம் கூடும் இடமான வணிக வளாகத்தில் இந்த நிகழ்வு நடத்தப்படுவது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதாகவும்,
ஸ்ரீ ராமகிருஷ்ணா இணை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய நேரடி செயல் மாதிரிகள் கண்காட்சியின் முக்கிய ஈர்ப்பாக அமைந்துள்ளது என்றார்.
சுவாசம் மற்றும் செரிமானம் தொடர்பான சிக்கலான மருத்துவக் கருத்துகளைச் சாமான்ய மக்களும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் இந்த மாதிரிகள் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும்,
நுரையீரல் பாதிப்பு மற்றும் செரிமானக் கோளாறுகளுக்கான அறிகுறிகள், தடுப்பு முறைகள் மற்றும் ஆரோக்கியமான வாழ்வியல் மாற்றங்கள் குறித்து மாணவர்களும் மருத்துவர்களும் பொதுமக்களுக்கு விளக்கமளித்தனர்.
உயர்தர மருத்துவச் சேவையுடன், சமூகப் பொறுப்புணர்வுடன் விழிப்புணர்வுப் பணிகளையும் முன்னெடுப்பதில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை எப்போதும் முன்னிலை வகிக்கிறது என்பதை இந்நிகழ்வு உறுதிப்படுத்தியுள்ளதாகவும்,
இக்கண்காட்சி மே16, மற்றும் 17 ஆகிய இரு நாட்கள் புரூக்ஃபீல்ட்ஸ் வணிக வளாகத்தில் நடைபெறும் என்றார்.