
கோவை துடியலூர் அருகே வட்டமலைப்பாளையத்தில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் இன்ஸ்டிடியூட் ஆஃப் எலெக்ட்ரிகல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியர்ஸ் தொழில்நுட்ப ரீதியாக ஸ்பான்சர் செய்யப்பட்ட நிலையான வளர்ச்சிக்கான பொறியியல் மற்றும் கணினி தொழில்நுட்பங்களின் முன்னேற்றங்கள் பற்றிய முதல் சர்வதேச மாநாடு இரண்டு நாட்கள் நடைபெற்றது.
தமிழ்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்கள் குத்துவிளக்கு ஏற்றி வைத்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். விழாவில் கல்லூரியின் முதல்வர் டாக்டர் ஏ.சௌந்தர்ராஜன் அனைவரையும் வரவேற்று மாநாட்டின் நோக்கங்கள் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கான துறைகள் இடையேயான ஆய்வின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளை யின் நிர்வாக அறங்காவலர் சுந்தர் ராமகிருஷ்ணன், தலைமை வகித்து குழுவின் முயற்சிகளை பாராட்டி, தரமான கல்வி மற்றும் ஆய்வை மேம்படுத்துவதில் அறக்கட்டளையின் உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்தும் வகையில் தனது வாழ்த்துரையை வழங்கினார்.
தைவான் நாட்டின் தேசிய சுங் செங் பல்கலைகழகத்தை சேர்ந்த, செயற்கை நுண்ணறிவு & நிலைத்தன்மை ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியர் மற்றும் இயக்குநர் டாக்டர் பாவ்-ஆன் ஹ்சியுங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடக்க உரையை ஆற்றினார்.
நிலைத்தன்மையில் உலகளாவிய போக்குகள், செயற்கை நுண்ணறிவின் உருமாறும் பங்கு மற்றும் பொறியியல் ஆராய்ச்சியில் சர்வதேச ஒத்துழைப்புகளின் முக்கியத்துவம் குறித்து அவர் பேசினார். மேலும் அவரது உரையில் ஸ்மார்ட் நகர நடைமுறைகளுக்கான புதுமையான எ ஐ வடிவமைப்புகள், நிலைத்த நகர் திட்டமிடல் மற்றும் நுண்ணறிவு வள மேலாண்மை குறித்து விவரித்தார்.
கேரளா. பாலக்காடு ஐஐடி யை சேர்ந்த இணை பேராசிரியர் டாக்டர் எம். சபரிமலை மணிகண்டன், IoT–எட்ஜ் மருத்துவ தரவு ஆனலிட்டிக்சிற்கான மேம்பட்ட சிக்னல் செயலாக்கம் மற்றும் டீப் லர்னிங் நெட்வொர்க்கள் என்கிற தலைப்பில் உருவெடுக்கின்ற ஆனலிட்டிக்ஸ் நுட்பங்கள், ஐ ஓ டி அடிப்படையிலான சுகாதார கண்காணிப்பு அமைப்புகள் மற்றும் எ ஐ மூலம் இயக்கப்படும் புதுமையான நோயறிதல் முறைகள் குறித்து உரையாற்றினார்.
விழாவின் ஒரு பகுதியையாக, மாநாட்டின் விழா மலர் வெளியீடு மற்றும் தேசிய சுங் செங் பல்கலைகழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த சர்வதேச மாநாட்டிற்கு மொத்தம் 1200 தொழில்நுட்ப கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. அவற்றில் 143 தொழில்நுட்ப கட்டுரைகள் முன்னணி தொழில்நுட்பங்களின் அடிப்படையில் குறுநிரலிடப்பட்டன. 28 வெளிநாட்டு ஆசிரியர்கள் தங்களுடைய ஆய்வின் தொழில்நுட்ப முடிவுகளை வழங்கினர்.
மேலும், தொழில்நுட்ப மதிப்பீடுகளை துல்லியமாக மேற்கொள்ள 440 தொழில்நுட்ப மதிப்பாய்வாளர்கள் மற்றும் 10 மெட்டா மதிப்பாய்வாளர்கள் பங்கேற்று மதிப்பீட்டு செயல்முறையை மேம்படுத்தினர்.
விழா ஏற்பாடுகளை மாநாட்டின் ஒழுங்கமைப்பு தலைவர் பேராசிரியர் ஆர். ஷண்முகசுந்தரம் தொழில்நுட்பத் தலைவர் பேராசிரியர் என். சதீஷ்குமார், பேராசிரியர் பாலமுருகன் ஆகியோர் செய்திருந்தனர்.
