
கோவை துடியலூர் அடுத்துள்ள மாநகராட்சி ஒன்றாவது வார்டுக்குட்பட்ட அப்பநாயக்கன்பாளையம் கேப்டவுனில் 3வது கூட்டு குடிநீர் திட்டத்தில் குழாய் பதிப்பதற்காக குழிகள் தோண்டப்பட்டதாலும், பாதாள சாக்கடைக்காக குழிகள் தோண்டப்பட்டதாலும் சேதமடைந்த சாலைகளை செப்பணிடும் பணியில் குறுக்கு சாலைகள் விடுபட்டதையடுத்து,

கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி ஆர் ஜி அருண்குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளை வரவழைத்து அனைத்து சாலைகளையும் செப்பணிட அறிவுறுத்தினார்.
கோவை துடியலூர் அடுத்துள்ள மாநகராட்சி ஒன்றாவது வார்டுக்குட்பட்ட அப்பநாயக்கன்பாளையம் கேப்டவுனில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அருகில் அர்ச்சனா நகர், மகா கணபதி நகர் உள்ளிட்ட பல நகர்கள் உள்ளன. அவர்கள் அனைவரும் இந்த நகர் சாலை வழியாக தான் துடியலூர் சாலைக்கு செல்ல வேண்டும்.

இந்த நிலையில் இந்த நகர் பகுதிகளில் 3வது கூட்டு குடிநீர் திட்டத்தில் குழாய் பதிப்பதற்காக குழிகள் தோண்டப்பட்டதாலும், பாதாள சாக்கடைக்காக குழிகள் தோண்டப்பட்டதாலும் கடந்த 6 மாதத்திற்கு மேலாக சாலைகள் சேதமடைந்து பொதுமக்கள் வெளியே செல்லமுடியாதவாறு சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
தற்போது பணிகள் முடிந்த நிலையில் தார் சாலைகள் அமைக்க வேலைகள் நடைபெற்று வருகிறது. ஆனால் அதில் நகர்பகுதியில் இருந்து செல்லும் பிரதான சாலையில் மட்டும் தார் சாலைகள் அமைக்க வேலைகள் நடைபெறுகின்றன. நகர்க்குள் இருக்கும் குறுக்கு சாலைகளில் தார் சாலைகள் அமைக்க எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் இந்த நகர் பகுதி மக்கள் அ தி மு க கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி ஆர் ஜி அருண்குமாரை நேரில் சந்தித்து, அனைத்து சாலைகளிலும் தார் சாலைகள் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தனர்.
இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு நேரில் வந்த பி ஆர் ஜி அருண்குமார் எம் எல் ஏ அந்த சாலைகளை பார்வையிட்டும், அந்த பகுதி மக்களிடம் குறைகளையும் கேட்டறிந்தார். தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகளை தொடர்புகொண்டு அங்கு வரவழைத்தார். அவர்களிடம் அதற்கான காரணங்களை கேட்டறிந்து அனைத்து சாலைகளிலும் முழுவதுமாக தார் சாலைகளை அமைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியதுடன் அதற்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால், உடனடியாக தன்னை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.
அதிகாரிகள் குறுக்கு சாலைகளிலும் சேர்ந்து தார் அமைத்துத் தருவதாக உறுதியளித்தனர். இதனைக் கேட்ட ஊர் பொதுமக்கள் சட்டமன்ற உறுப்பினர் பி ஆர் ஜி அருண்குமாருக்கு கைகளை தட்டி நன்றி தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியின்போது, 1வது வார்டு கழக செயலாளர் கே சாந்திபூசன், கட்சி நிர்வாகி சண்முகம் மற்றும் ஊர்பொதுமக்கள், நலச்சங்கத்தினர் உள்பட பலர் கலந்துக்கொண்டனர்.
