கோவை நவ இந்தியா பகுதியில், உள்ள ஹிந்துஸ்தான் கல்லூரி வளாகத்தில், கோவை மாவட்ட நிர்வாகம், மாநகர காவல்துறை மற்றும் உயிர் அமைப்பு இணைந்து கோவையின் மாபெரும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தின் துவக்கவிழா நடைபெற்றது.

கோவை நவ இந்தியா பகுதியில் ஹிந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகின்றது. இக்கல்லூரி வளாகத்தில் கோவை மாவட்ட நிர்வாகம், மாவட்ட காவல்துறை மற்றும் சாலை பாதுகாப்பு துறையில் செயல்பட்டு வருகின்ற தன்னார்வ தொண்டு நிறுவனமான உயிர் ஆகியவை இணைந்து கோவையின் மிகப்பெரிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரத்தின் துவக்கவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. நான் உயிர் காவலன் எனும் தலைப்பில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தின் துவக்கவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், மாநகராட்சி ஆணைய‌ர் சிவகுரு பிரபாகரன், உயிர் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் ராஜசேகரன், மற்றும் ஸ்ரீகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவரும் உயிர் அறக்கட்டளையின் அறங்காவலருமான மலர்விழி ஆகியோர் கலந்து கொண்டு இந்த பிரச்சாரத்தை துவக்கி வைத்ததுடன், இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்திற்காக விளம்பர பலகையும் வெளியிட்டனர். தொடர்ந்து மாணவ மாணவிகள் மத்தியில் பேசிய ஆட்சியர் பவன்குமார் கூறியதாவது..
கடந்த சில ஆண்டுகளாக கோவையில் சாலை விபத்துக்களை குறைக்க பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டும் உயிர் அமைப்புடன் இணைந்து சாலை பாதுகாப்பு, குறித்து பல்வேறு பேரணிகள், கருத்தரங்குகள், பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், மேலும் அக்டோபர் முதல் வாரத்தில் கோவை மாநகரில் உள்ள 10 நபர்களை ஒன்றினைத்து அனைவரும் ஒன்று சேர்ந்து சாலை பாதுகாப்பு உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சியும் நடத்த திட்டமிடப் பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலை சங்கங்கள், சமூகநல அமைப்புகள் என பலரும் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.