
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பின் சார்பில் நில அளவை களப்பணியாளர்களின் 14 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி 100க்கும் மேற்பட்ட நில அளவை அலுவலர்கள் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் தரணிவாசன் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அனைத்து நில அளவை அலுவலர்களையும் வரவேற்று பேசினார்.
தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பின் மாநிலத் தலைவர் ராஜா 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
மாவட்ட தலைவர் தரணிவாசன், மாவட்ட செயலாளர் சென்னையண் உள்ளிட்ட நிர்வாகிகள் தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் சிறப்புரையாற்றினர்.
தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு முன்வைத்த கோரிக்கைகளை நில அளவை இயக்கத்தாலும் தமிழக அரசாலும் தீர்வு காணப்படாமல் நீண்ட காலமாக நிலுவையில் வைத்து உள்ளனர். எனவே தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி 3 கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இணைய வழி உட்பிரிவு பட்டா மாறுதலில் உள்ள மனித சக்திக்கு மீறிய பணி குறியீட்டினை குறைத்திட வேண்டும்,
பதவி உயர்வுக்கு தகுதி பெற்றும் பதவி உயர்வு பெறாதவர்களை பட்டியலில் இணைத்து பதவி உயர்வு வழங்க வேண்டும்,
துணை ஆய்வாளர்கள் ஊதிய முரண்பாடு களைய வேண்டும்,
உடனடியாக நில அளவர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்,
புல உதவியாளர்களை காலமுறை ஊதியத்தில் பணியமர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தின் இறுதியாக அரசு ஊழியர் சங்கம் மகாதேவன் மற்றும் மாவட்ட தலைவர் பரிதிமால் கலைஞன் அனைவருக்கும் நன்றி கூறினார்.
