
கோவை கவுண்டம் பாளையம் பகுதியில் ஆதித்யா சிலம்ப பாசறை எனும் சிலம்ப பயிற்சி மையம் கடந்த மூன்று தலைமுறைகளாக செயல்பட்டு வருகிறது. இதன் தலைமை ஆசானாக முத்துபாண்டியன் உள்ளார். இவர் கடந்த, 47 ஆண்டுகளாக சிலம்ப கலைகளை மாணவ மாணவியர்களுக்கு பயிற்சி அளித்து வருகின்றார். மாணவர்களுக்கு, சிலம்பகலையில், நடுகம்பு சுற்று முறை, போர் முறை சிலம்பம், அலங்கார சிலம்பம், தொடுமுறை சிலம்பம், தனித்திறன் பாடங்கள், வேல்கம்பு, மான்கொம்பு, ஒற்றை சுருள், இரட்டை சுருள், கூர்வாள் ஒற்றை, மற்றும் இரட்டை, பிச்சுவாள், பட்டைவாள் கேடயம், அடிமுறை குத்து வரிசை, வர்மம் தொடுதல், தற்காப்பு பயிற்சிகள் அளிக்க பட்டு வருகின்றது. இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி முதல் செப்டம்பர் 10ஆம் தேதி வரை தமிழக முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றது. கோவை மாவட்டத்தில் 13 இடங்களில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றது. இத்தகைய போட்டியில் ஆதித்யா சிலம்பபாசறை மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தி உள்ளனர்

. கடந்த ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியில், நடைபெற்ற பள்ளிகளுக்கு இடையிலான சிலம்ப போட்டியில் கோகிலா ஸ்ரீ என்ற மாணவி இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்தார். செப்டம்பர் 3ஆம் தேதி நடைபெற்ற பொதுபிரிவு சிலம்ப போட்டியில், ஆதித்யா சிலம்ப பாசறையின் பயிற்சியாளர்கள் சரண், மற்றும் அரவிந்தன், ஆகியோர் வெற்றி பெற்றனர், வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு, கோவை வ உ சி பூங்கா மைதானத்தில் பரிசளிப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார், மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், கோவை மாநகராட்சியின் மேயர் ரங்கநாயகி, கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களும், பதக்கங்களையும் வழங்கி பெருமைப்படுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
