
இந்திய பொறியாளர் மோக்சகுண்டம் விஸ்வேஸ்வரய்யாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் பொறியாளர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை துடியலூர் அருகே வட்டமலை பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் பொறியாளர் தினம் கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் இரண்டாம் ஆண்டு கம்யூனிகேஷன் அண்ட் கம்ப்யூட்டர் நெட்வொர்க்கிங் துறை மாணவி நிகிதா அனைவரையும் வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் டாக்டர் டி கோபாலகிருஷ்ணன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பேசும்போது பொறியாளர்களுக்கான வேலைவாய்ப்புகள் தற்போது எந்த அளவிற்கு அதிகரித்துள்ளது என்பது குறித்து எடுத்துக்கூறினார்.
சிறப்பு விருந்தினராக ஸ்னைடர் எலக்ட்ரிக் நிறுவனத்தின் வடிவமைப்பு மற்றும் வளர்ச்சி பிரிவின் துணை பொது மேலாளர் கே ஜெகதீஷ் குமார் கலந்துகொண்டு மாணவர்களிடையே பொறியாளர் தின உரை நிகழ்த்தினார்.
அவர் பேசும்போது பொறியியல் என்பது எந்த ஒரு செயலுக்கும் தீர்வை அளிப்பது ஆகும். தற்கால சூழலில் பொறியாளர்கள் பொறியியல் பணிகளை கடந்து கணக்குகளை நிர்வகித்தல், பண நிர்வாகத்தை மேற்கொள்ளுதல் மற்றும் மனித வளங்களை கையாளுதல் ஆகியவற்றிலும் தங்களை ஈடுபடுத்தி கொண்டுள்ளனர். பொறியாளர்கள் புதுமைகளை படைப்பதுடன், தாக்குப்பிடிக்கத்தக்க, நீடித்த நிலைத்தன்மை உடையவைகளை சமூகத்திற்கு பங்களிப்பதில் முழு கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
மேலும் இக்கல்லூரியின் இயந்திரவியல் துறை முன்னாள் மாணவரும், கோவை ராபர்ட் போஸ் நிறுவன குழுத்தலைவர் என் தனசேகர் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.

அவர் பேசும்போது தான் பொறியியல் படிக்கும் போது ஆசிரியர்கள் கற்றுக் கொடுத்த பாடங்களே தற்போது இந்த அளவிற்கு வெற்றி பெற உதவியது. எனவே ஆசிரியர்கள் கற்றுக்கொடுக்கும் பாடங்களை முழுமையாக புரிந்து படித்து வெற்றிபெற வெண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் அவர் பயிலும்போது அவருக்கு கற்றுக்கொடுத்த ஆசிரியர்களுக்கு சிறப்பு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு தெரிவித்தார். மேலும் மாணவ மாணவிகளை பொறியாளர் தின உறுதிமொழி ஏற்கவைத்தார்.
இதனைத் தொடர்ந்து புதிய தொழில்நுட்ப வடிவமைப்புகளுக்கான போட்டிகள், தொழில்நுட்ப கருத்தரங்கம் மற்றும் தொழில்நுட்ப கட்டுரை சமர்பித்தலில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். இறுதியாக இரண்டாம் ஆண்டு கணிப்பொறி துறை மாணவி விசாகா சிவமணி நன்றி கூறினார்.
