தாராபுரம் அருகே கூலித் தொழிலாளி மர்ம மரணம் – மனித உரிமை ஆணையம் நேரில் ஆய்வு.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகேயுள்ள சென்னாக்கள்பாளையத்தில் கூலித் தொழிலாளி முருகன் (வயது 42) மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் சமூகத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

முருகனின் உடல் கடந்த மாதம் 26ஆம் தேதி காலை, வேப்பமரத்தில் கைகள் கட்டப்பட்ட நிலையில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. சம்பவம் குறித்து அலங்கியம் காவல்துறையினர் “மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொண்டுள்ளார்” என தெரிவித்ததுடன், உடனடியாக பிரேத பரிசோதனை நடத்தி, குடும்பத்தினரிடம் உடலை ஒப்படைத்து மின் மயானத்தில் எரித்துவிட்டனர்.

இந்த மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில், தமிழ் புலிகள் கட்சி, ஆதி தமிழர் பேரவை, தமிழ்நாடு அருந்ததியர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு அருந்ததியர் சங்கம் உள்ளிட்ட சமூக நீதி சார்ந்த அமைப்புகள் மனித உரிமை ஆணையத்திடம் முறையிட்டிருந்தன.

இதனைத் தொடர்ந்து, மனித உரிமை ஆணையத் தலைவர் நீதியரசர் தமிழ்வாணன் உத்தரவின் பேரில், தமிழ்நாடு எஸ்.டி.எஸ்.டி ஆணையத்தின் மாநில உறுப்பினர்கள் செல்வகுமார் மற்றும் பொன் ஜோஸ் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று நேரில் ஆய்வு மேற்கொண்டனர். முருகன் தூக்கில் தொங்கிய மரத்தில் ஏறிச் சரிபார்த்ததுடன், அந்த இடத்தில் தற்கொலை நிகழ்வது சாத்தியமா என்பதைப் பற்றியும் ஆய்வு செய்தனர்.

பின்னர், அவர்கள் தாராபுரம் கோட்டாட்சியர் ஃபிலிக்ஸ் ராஜா, வட்டாட்சியர் திரவியம், காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார், ஆய்வாளர் விஜயசாரதி ஆகியோருடன் இணைந்து முருகனின் இல்லத்திற்குச் சென்று அவரது மனைவி மணிமேகலை, மகள் கலாவதி (ஏழாம் வகுப்பு), மற்றும் தங்கை காவியா (ஆறாம் வகுப்பு) ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.

மேலும், அலங்கியம் காவல்துறை மற்றும் கிராம பொதுமக்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணைகளின் அடிப்படையில் சில முக்கிய தகவல்கள் மனித உரிமை ஆணையத்தினருக்கு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

“முருகனின் மரணம் தற்கொலையா, அல்லது கொலையா என்பது விரைவில் தெரியவரும். அதுவரை சந்தேகம் நீங்காது,” என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், முருகனின் மரணத்திற்கு காரணம் என்ன என்பதை அறிய ஊர்த் தொழிலாளர்கள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு சமூக, அரசியல் அமைப்புகள் எதிர்பார்த்துள்ளனர்.

மேலும், அவரது மனைவி மணிமேகலைக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.