திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் கார்த்திகை தீபத்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும் ,பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் விளங்கும் உலக புகழ்பெற்ற திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் ஆலயத்தில் கார்த்திகை மாதத்தில் பத்து நாட்கள் நடைபெறும் திருகார்த்திகை தீபத்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கொடியேற்ற விழாவை முன்னிட்டு இன்று அதிகாலை ஆலயத்தின் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார் உண்ணாமலைஅம்மன் ,மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று , பஞ்சமூர்த்திகளான. சந்திரசேகரர்,பராசக்தி அம்மன், விநாயகர்,சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் தங்க கொடிமரத்திற்கு முன்பாக எழுந்தருள சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க அப்போது 68 அடி உயரமுள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. அப்போது பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா, உண்ணாமலை அம்மனுக்கு அரோகரா என்ற கோஷங்களை எழுப்பி வழிபட்டனர்.

இதை தொடர்ந்து இன்று முதல் பத்து நாட்களுக்கு காலை,மாலை இரு வேலைகளிலும் சாமி நான்கு மாடவீதிகளை சுற்றி திருவீதி உலா நடைபெறும்.

இதில் முக்கிய விழாவாக வரும் 29 ந் தேதி இரவு வெள்ளி ரத உற்சவமும்,30 ந் தேதி தேர் திருவிழாவும் நடைபெறுகிறது.

பத்தாவது நாள் திருவிழாவான தீபத்திருவிழா அடுத்த மாதம் 3 ந் தேதி நடைபெறுகிறது அன்று அதிகாலை 4 மணிக்கு ஆலயத்தில் பரணி தீபமும், அன்று மாலை 6 மணிக்கு 2668 அடி உயரமுள்ள அண்ணாமலையார் மலை உச்சியின் மீது மகா தீபமும் ஏற்றப்படுகிறது.

இதை தொடர்ந்து மூன்று நாட்களுக்கு தெப்பல் திருவிழாவும் நடைபெறுகிறது.இன்று காலை நடைபெற்ற கொடியேற்ற விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் தர்ப்பகராஜ் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்