மேலூர் அருகே நடைபெற்ற பாரம்பரியமிக்க மீன்பிடித் திருவிழா பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கு பெற்று நாட்டு வகை மீன்களை பிடித்து உற்சாகம்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரியூர்பட்டி கிராமத்தில் பாரம்பரியமிக்க மீன்பிடித் திருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.இதில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு நாட்டு வகை மீன்களை பிடித்து மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர்.

மேலூர் அருகே அரியூர்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது சாத்தன் அய்யனார் கோவில் கண்மாய். சுமார் 10 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த கண்மாய் நீரைப் பயன்படுத்தி அப்பகுதியில் 100 ஏக்கர் பரப்பளவில் கரும்பு வாழை நெல் உள்ளிட்ட விவசாய பணிகளை விவசாயிகள் மேற்கொண்டு வந்தனர். தற்போது கோடை காலம் துவங்கி கண்மாயில் நீர்வற்ற தொடங்கிய நிலையில் இன்று மீன் பிடித் திருவிழா நடத்தப்படும் என சமூக வலைதளங்கள் மூலம் கிராமத்தின் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து அதிகாலை முதல் அழகர்கோவில் நத்தம் சிங்கம்புணரி திருப்பத்தூர் தனியாமங்கலம் கீழையூர் கீழவளவு சருகுவலையபட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் மீன்களை பிடிப்பதற்காக கரையில் காத்துக் கிடந்தனர். அதனை தொடர்ந்து கிராம பெரியவர்கள் வந்து அய்யனார் கோவிலில் சாமி கும்பிட்டு வெள்ளை வீசி மீன்பிடிக்க அனுமதி அளித்தவுடன் ஒன்று சேர கண்மாய்க்குள் இறங்கிய பொதுமக்கள் கச்சா ஊத்தா கூடை உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை பயன்படுத்தி கட்லா ரோகு கெளுத்தி ஜிலேபி கட்லெட் அயிரை உள்ளிட்ட நாட்டு வகை மீன்களை பிடித்து மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர். இந்த மீன் பிடித்த திருவிழாவில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை குடும்பம் குடும்பமாக வந்து கலந்து கொண்டு மீன்களை பிடித்தனர்.மீன்கள் அதிக அளவு எடை அதிகரிக்கவில்லை என்ற போதிலும் ஒவ்வொரு வலைக்கும் மூன்று முதல் ஐந்து கிலோ வரை மீன்கள் சரளமாக கிடைத்தன.