ராமநாதபுரத்தில் சட்டம் ஒழுங்கு படுமோசம்-பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் பொன்.பாலகணபதி குற்றச்சாட்டு

ராமநாதபுரத்தை அடுத்த அச்சுந்தன் வயல் பகுதியில் அமைந்துள்ள பா.ஜ.க மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமையில்,மாநில பொதுச் செயலாளர் பொன்.பாலகணபதி நிருபர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

டாஸ்மாக் விவகாரத்தில் 1000 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி நடந்திருப்பதாக இ.டி அறிவித்திருக்கும் நிலையில் அது 30,000 முதல் 40,000 கோடி வரை ஊழல் நடந்திருப்பதாக சொல்லப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் 10 லட்சம் மது பாட்டில்கள் தயாரிப்பதற்கு அனுமதி பெற்று விட்டு 15 லட்சம் மது பாட்டில்களை தயாரித்து அரசுக்கு மிகப்பெரிய நிதி இழப்பை ஏற்படுத்தும் நிலை இருப்பதாகவும் தெரிவித்தார்.மேலும் ராமநாதபுரத்தில் சட்டம் ஒழுங்கு மிக மோசமான நிலையில் இருப்பதாகவும் குறிப்பாக கந்து வட்டி கும்பலால் தாக்கப்பட்டு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலேயே விஷமருந்தி உயிரிழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது சட்டம் ஒழுங்கு மோசமான நிலையில் இருப்பதற்கு சான்றாக அமைந்திருப்பதாகவும் அது மட்டுமல்லாது மது விற்பனையில் பத்து ரூபாய் கூடுதலாய் வாங்குவதால் ராமநாதபுரத்தில் தோராயமாக செயல்பட்டு வரும் 129 அரசு மதுபான கடைகள் மூலம் முறைகேடாக சுமார் 10 கோடி ரூபாய் வரை தி.மு.க ஒன்றிய செயலாளர் துவங்கி மாவட்ட செயலாளர்,அரசு அதிகாரிகள் என அனைத்துதரப்பிற்கும் பங்கு போகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இப்பேட்டியின் போது ராமநாதபுரம் பா.ஜ.க நகராட்சி கவுன்சிலர் ஜி.குமார்,முன்னாள் ஊடக பிரிவு தலைவர் எஸ்.பி.குமரன் உட்பட பலர் உடனிருந்தனர்.