
ராமநாதபுரத்தில் தமிழர் அதிகாரம் தலைவர் இரா.சு.அழகர்சாமி பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
இந்தியாவில் பெரும் லாபத்தை ஈட்டித் தரக்கூடிய பொதுத்துறை நிறுவனமான ஓஎன்ஜிசி (Oil and Natural Gas Corporation ) கடந்த 30.10.2023 அன்று தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் ஒரு மனுவை சமர்ப்பித்திருக்கிறது அதன்படி இராமநாதபுரம் மாவட்டத்தில் மூன்றில் ஒரு பங்கு இடமும்,
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை தாலுகாவில் 10 இடங்கள் என 250 இடங்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. அதில் சர்வதேச நாடுகள் தடை செய்த நீரியல் விரிசல் முறையில் (Hydraulic Fracturing ) அதாவது 2000 முதல் 3000 மீட்டர்கள் ஆழத்திற்கு 20 சோதனை கிணறுகளைத் தோண்டி, ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்காக விண்ணப்பித்திருந்தது. சோதனை முறையில் 20 கிணறுகளை தோண்டுவதற்காக விண்ணப்பித்த ஓஎன்ஜிசி நிறுவனத்திற்க்கு 1403.97 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்கு ஏற்கனவே மத்திய அரசு அனுமதி வழங்கிவிட்டது.
மத்திய அரசின் புதிய எண்ணெய் எடுப்பு கொள்கையாகிய Hydrocarbon Exploration and Licensing Policy அடிப்படையில் மூன்றாவது சுற்று திறந்தவெளி ஏலம் மூலம் இந்த அனுமதியைப் பெற்ற ONGC தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தின் அனுமதிக்காக மட்டும் காத்திருந்தது.1403.41 சதுர கிலோமீட்டர் பரப்பில், சமவெளிப் பகுதியில் 1259.44 சதுர கிலோமீட்டரும், ஆழமற்ற கடல் பகுதியில் 143.97 சதுர கிலோமீட்டர் இடமும் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது.ராமநாதபுரம் மாவட்டம் என்றால் வானம் பார்த்த பூமி என்று உலகை நம்ப வைத்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் நமது மாவட்டத்தில் 1 லட்சத்து 72 ஆயிரத்து 469 ஹெக்டேர் பரப்பில் விவசாயம் நடந்து வருகிறது. இதில் 63 ஆயிரத்து 800 ஹெக்டேர் நேரடி பாசனமாக இருந்து வருகிறது.1,694 கண்மாய்களும், 7,321 கிணறுகளையும் கொண்ட ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள விவசாய சாகுபடியாளர்களின் எண்ணிக்கை மட்டும் ஒரு லட்சத்து 73 ஆயிரத்து 767 பேர் ஆகும்.தமிழ்நாட்டில்,சென்னை நீங்கலாக அனைத்து மாவட்டங்களிலும் நெல் விளைகிறது.நெல் விளையும் முக்கிய மாவட்டங்கள் (பரப்பளவில்) திருவாரூர் (8.9%) தஞ்சாவூர் (8.8%) நாகப்பட்டிணம் (8.7%) விழுப்புரம் (7.9 %),ராமநாதபுரம் (6.9%) நெல் உற்பத்தியில் நமது மாவட்டமும் முக்கிய பங்கு வகிக்கிறது.
ஏற்கனவே நமது மாவட்டத்தில் அதானி குழுமம் 4,450 கோடி ரூபாய் முதலீட்டில், 648 மெகாவாட் மின்சாரம் எடுக்கும் உலகத்தின் 12 வது சோலார் பூங்காவை அமைத்து மாவட்டத்தின் ஒரு பகுதி விவசாய நிலங்களை முடித்துவிட்ட நிலையில்,இப்போது ஓ.என்.ஜி.சி யும் ராமநாதபுரம் மாவட்டத்தை குறி வைத்திருக்கிறது.
இதில் பெரும் அச்சுறுத்தல் யாதெனில்.?
ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்காக ஒரு உரிமம் மட்டும் பெற்றால் போதும், அதைக் கொண்டே அப்பகுதியில் கிடைக்கும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட அனைத்து வகையான கரிமங்களையும் எடுக்க முடியும் என்கிறது மத்திய அரசின் புதிய எண்ணெய் எடுப்புக் கொள்கை. அதனடிப்படையில் நீரியல் விரிசல் முறையில் இங்கு ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி அளித்தது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.
இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மன், ஸ்காட்லாந்து உள்ளிட்ட நாடுகளில் ஏற்கனவே தடை செய்யப்பட்ட நீரியல் விரிசல் முறை என்பது. இயற்கைக்கு எதிரான தொழில்நுட்ப பயன்பாடாகும். அதாவது வேதிப்பொருட்களின் கலவையை பூமிக்குள் செலுத்தி, பாறைகளை விலக்கி, அவற்றுக்கு நடுவே உள்ள மீத்தேன் எரிவாயு எப்படி எடுக்கப்படுமோ அதுபோல தான் ஹைட்ரோ கார்பன் வளமும், நீரியல் விரிசல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எடுக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது.
நிலவியல் ஆய்வாளர்களின் சமீபத்திய அறிக்கையொன்றில் ஹைட்ரோ கார்பன் எண்ணெய் எரிவாயு திட்டங்களால், காவிரி டெல்டா மாவட்டங்களில் நிலமும், நீரும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், கழிவுகளை கையாண்ட முறையில் தவறு இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் நிலையில்,இவை எதையும் கண்டுகொள்ளாது. ஓ என் ஜி சியும், இந்திய புவியியல் ஆய்வு மையமும் தென் தமிழகத்தை குறி வைத்திருப்பது அச்சமாக இருக்கிறது.
ஏற்கனவே அரியலூரில் 10 ஹைட்ரோகார்பன் கிணறுகளையும், கடலூரில் ஐந்து ஆழ்துளை கிணறுகளையும் சோதனை முறையில் தோண்டுவதற்காக ஓ என் ஜி சி யால்,கோரப்பட்ட அனுமதியை கடந்த 2021 ஆம் ஆண்டு நிராகரித்து உத்தரவிட்ட தமிழக அரசு தற்போது இராமநாதபுரம் மாவட்டத்தில் கிணறு தோண்டுவதற்கான அனுமதியை வழங்கியிருக்கிறது.
காவிரிப் படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து கடந்த 2020 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றியது போல,
வேளாண்மை, கடல் வளம் இவற்றையே பெரிதும் நம்பியிருக்கும் இராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், மற்றும் தேனி ஆகிய வைகை படுகை மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கவும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யவும் வலியுறுத்தி அனைத்து ஜனநாயக இயக்கங்களை ஒன்றிணைத்து தமிழர் அதிகாரம் சார்பில் மிகப்பெரிய அளவிலான போராட்டம் நடைபெறும்.
இவ்வாறு அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
