தஞ்சை ஜோதி அறக்கட்டளையினரின் செயலால் நெகிழ்ந்த தூய்மை பணியாளர்கள் . . .
தஞ்சை மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகளை உள்ளடக்கிய 14 டிவிஷன்களில் சுமார் 600 நிரந்தர மற்றும் தற்காலிக தூய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள் . தஞ்சை மாநகரில் உள்ள தெருக்கள் , குடியிருப்பு பகுதிகள் , வணிக வளாகங்கள் , அடுக்குமாடி கட்டிடங்கள் போன்றவற்றில் தேங்கும் குப்பைகளை அகற்றும் இவர்களது பணி தினமும் அதிகாலையில் 5 மணிக்கு ஆரம்பித்து மாலை 6 மணி வரை தொடர்கிறது . மாநகரை சுத்தமாக வைத்திருக்க விடுமுறையின்றி உழைக்கும் தூய்மை பணியாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில் தஞ்சை ஜோதி அறக்கட்டளை நிறுவனம் அவர்களை ஆந்திர மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் ஆலயத்துக்கு ஆன்மீக சுற்றுலாவாக அழைத்து சென்று சாமி தரிசனம் மேற்கொள்ள வைக்க முடிவெடுத்தனர் . தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய பலமணி நேரம் காத்திருக்கும் திருப்பதி ஏழுமலையான் ஆலயத்திக்கு தூய்மை பணியாளர்களை அழைத்து சென்றால் மாநகரில் தூய்மை பணி பாதிக்கும் என்பதை உணர்ந்த அறக்கட்டளை நிர்வாகிகள் தங்களது திட்டத்துக்கு தற்காலிக மாற்று ஏற்பாடு ஒன்றை செய்தனர் . இதன்படி தஞ்சை மாநகரில் அதிகாலையில் தூய்மை பணியாளர்கள் பணிபுரிந்து கொண்டிருந்த இடங்களுக்கே நேரில் சென்ற ஜோதி அறக்கட்டளை நிர்வாகிகள் ஏழுமலையானின் பிரசாதமான லட்டுவை தூய்மை பணியாளர்களுக்கு வழங்கினர் . மேலும் திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட பெருமாளின் ஆளுயர படம் தாங்கிய 2025 ஆங்கில புத்தாண்டு நாட்காட்டியும் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட்டது . பெருமாளுக்கு உகந்த நாளாக கருதப்படும் சனிக்கிழமையில் அதுவும் அதிகாலையில் அனைவரின் இல்லங்களிலும் சுப்ரபாதம் ஒலிக்கும் நேரத்தில் திருப்பதி ஏழுமலையானின் லட்டு பிரசாதம் தங்களை தேடி வந்ததை கண்ட தூய்மை பணியாளர்கள் மிகுந்த பக்தி சிரத்தையுடன் தாங்கள் அணிந்திருந்த காலணிகளை கழற்றிவிட்டு பயபக்தியுடன் லட்டு பிரசாதத்தை கண்களில் ஒற்றிக்கொண்ட பின்னர் மகிழ்வுடன் அருந்தினர் .

வாழ்க்கையில் ஒரு முறையேனும் திருப்பதிக்கு சென்று எல்லாம் வல்ல ஏழுமலையானை தரிசித்துவிட மாட்டோமா என்ற ஏக்கத்தில் இருந்த எங்களை தேடி திருப்பதி பெருமாளின் லட்டு பிரசாதம் வந்தது அந்த பெருமாளே தங்களை தேடி நாடி ஓடி வந்து காட்சி தந்தது போல இருந்ததாகவும் எங்கள் இல்ல பூஜையறையில் பெருமாளின் படம் இல்லாமல் இருந்த குறையை பெருமாளின் முழு உருவம் கொண்ட ஆங்கில புத்தாண்டு நாட்காட்டி நிவர்த்தி செய்துவிட்டது என்றும் இதனை ஏற்பாடு செய்த ஜோதி அறக்கட்டளை நிர்வாகத்துக்கு நன்றி தெரிவிப்பதாகவும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டனர் .
இதற்கான ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலர் பிரபு ராஜ்குமார் மேற்பார்வையில் மேலாளர் ஞானசுந்தரி நிர்வாக உதவியாளர் குகனேஸ்வரி உள்ளிட்டோர் செய்திருந்தனர் .
