
கோவை துடியலூர் அருகே வட்டமலைப்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை பயின்று பட்டம் பெற்ற, மாணவ மாணவியர்களின் சந்திப்பு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மாணவ சங்கத் தலைவர் வீணா ரமேஷ் அனைவரையும் வரவேற்றார். S N R சன்ஸ் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் R சுந்தர் தலைமை தாங்கினார். அவர் பேசும்போது இந்த 25 ஆண்டுகளில் ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி மற்றும் S N R சன்ஸ் அறக்கட்டளை வளர்ந்த விதத்தை விவரித்தார்.
கல்லூரி முதல்வர் முனைவர், A. சௌந்தர்ராஜன் உரையாடும் போது முன்னாள் மாணவர் சங்கத்தின் செயல்பாடுகள் மற்றும் முக்கியதுவத்தை பற்றியும், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் முன்னாள் மாணவர் சங்க கிளைகள் வளர்ச்சி அடைய உறுதுணையாக இருந்த முன்னாள் மாணவர்களின் பல்வேறு சேவைகளை குறிப்பிட்டார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழ் ஆசிரியையும் பட்டிமன்ற பேச்சாளருமான கோவை சாந்தாமணி கலந்துகொண்டு, சிறப்பாக கல்லூரிக்கு பல்வேறு வகையில் சேவை புரிந்த முன்னாள் மாணவ மாணவியருக்கு விருது வழங்கி கௌரவித்தார்.
மேலும் அவர் பேசுகையில் ஒற்றுமையின் முக்கியத்துவம், மாணவர்களின் அறிவு மற்றும் ஆக்கபூர்வமான செயல்பாடுகளை தனக்கே உரித்தான நகைச்சுவை பாணியில் பாராட்டி பேசினார்.

இந்நிகழ்ச்சியில் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை இக்கல்லூரியில் பயின்று பட்டம் பெற்று, இந்தியா மற்றும் பல பகுதிகளில் இருந்தும் வெளிநாடுகளில் பல முன்னணி நிறுவனங்களில் பணிபுரிந்து கொண்டிருப்பவர்கள் இருநூறுக்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு அவர்கள் பயின்ற போது கிடைத்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். தொடர்ந்து அனைவரும் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
மேலும் மதியம் சங்கத்தின் வருடாந்திர பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. விழாவின் ஒரு பகுதியாக விழா மலர் வெளியிட்டு, இப்போது சிறப்பாக படித்து கொண்டிருக்கும் மாணவ மாணவியர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. இதில் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர். மாணவர் விழா ஏற்பாடுகளை சங்கத் தலைவர் வீணா செயலாளர் செந்தில் கண்ணன் மற்றும் பேராசிரியர் பெருமாள் ஆகியோர் செய்து இருந்தனர்.
