
கோவை கணுவாய் அருகே காளப்பநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் அனன்யா செல்டர்ஸ் சார்பில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் கட்டி கொடுக்கப்பட்ட பள்ளி கட்டிடம் மற்றும் உணவு கூடத்தை அதன் நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் ஜி கிரியப்பனவர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
கோயம்புத்தூர் மாவட்டம் கணுவாய் அருகே 1925ம் ஆண்டு தொடங்கப்பட்ட காளப்பநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளி 100 ஆண்டுகள் ஆவதை ஒட்டி பள்ளியின் நூற்றாண்டு விழா, பள்ளி நூற்றாண்டு நினைவு கட்டிடங்கள் திறப்பு விழா மற்றும் பள்ளி கட்டிடங்களை கட்டித் தந்த அனன்யா குழுமத்திற்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.
விழாவிற்கு முதன்மை விருந்தினராக கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பவன்குமார் ஜி கிரியப்பனவர் கலந்து கொண்டு அனன்யா செல்டர்ஸ் சார்பில் ரூபாய் 1 கோடி மதிப்பில் கட்டப்பட்ட பள்ளி கட்டிடங்கள் மற்றும் உணவு கூடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆட்சியர் கல்வி மலர் புத்தகத்தை வெளியிட்டு நன்கொடையாளர்களை பாராட்டி னார்.
சிறப்பு விருந்தினர்களாக கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், கோயம்பததூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
விழாவிற்கு பள்ளியின் மேனாள் தலைமை ஆசிரியரும் பள்ளியின் மூத்த மாணவருமான பொ. ராமலிங்கம் தலைமை வகித்தார். விழாவிற்கு வந்திருந்தவர்களை பள்ளியின் ஆசிரியர் சுகுணா வரவேற்று பேசினார்.
விழாவில் ஏற்புரையாற்றிய அனன்யா குழுமத்தின் இணை நிர்வாக இயக்குனர் உமா மகேஸ்வரி யுவராஜ் பேசும்போது அனன்யா குடும்பத்தின் சார்பில் மூத்த குடிமக்களுக்கு எண்ணற்ற சேவைகளையும், அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருவதில் இந்தியாவிலேயே முன்னணி நிறுவனமாக அனன்யா குழுமம் இருப்பதில் பெருமை கொள்கிறோம்.
நாம் வாழும் இந்த சமுதாயத்திற்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்ற கருத்தில் கோயம்புத்தூர் மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், சோமையம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு எங்களது பெரு நிறுவன சமூகப் பொறுப்புணர்வு மூலம் இப்பள்ளியின் 1 கோடி ரூபாய் மதிப்பில் கட்டிடங்களை புணரமைத்தும் உணவுக்கூடத்தை உணரமைத்தும் கொடுத்துள்ளோம்.

இங்கு பயிலும் மாணவர்கள் நல்ல முறையில் பயின்று வரும் காலங்களில் மிகப்பெரிய அரசு பணிகளிலும், தொழிலதிபர்களாகவும், விஞ்ஞானிகளாகவும் வர வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். இனிவரும் காலங்களில் அனைத்து விதமான உதவிகளும் செய்ய நாங்கள் தயாராக உள்ளோம். இங்குள்ள மாணவர்கள் இப்பள்ளியின் வளத்தையும் சுற்றுப்புற சூழலையும் முறையாக பராமரிக்க வேண்டும் என்று பேசினார்.
மேலும் விழாவில் கோயம்பத்தூர் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் உயர் பெ இரவிச்சந்திரன், பெரியநாயக்கன்பாளையம் வட்டார கல்வி அலுவலர் 1 இரா ராஜேந்திரன், வட்டார கல்வி அலுவலர் 2 சி இராஜம்மாள் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
விழா முடிவில் பள்ளி ஆசிரயர் ஆரோக்கியதாஸ் நன்றி உரையாற்றினார். இதைத்தொடர்ந்து மாலை 5 மணிக்கு பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழாவும் நடைபெற்றது. விழாவில் ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் ஊர் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
