ஆசிரியர்கள் மீது பொய்ப் புகார் துணைபோகும் தலைமை ஆசிரியையை பணி மாற்றம் செய்ய தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் சங்கம் அரசுக்கு கோரிக்கை!!!

சென்னை தி.நகரில் தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் சங்க நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது:-

சென்னை கோடம்பாக்கம் பதிப்பகச் செம்மல் க.கணபதி அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2 மாதங்களாக அசாதாரண சூழல் நிலவி வருகிறது. அந்த பள்ளியில் பணியாற்றும் உடற்கல்வி ஆசிரியர் சீனிவாசன், கணித பட்டதாரி ஆசிரியை மீனாட்சி ஆகியோர் ஒரு மாணவனை சாதிப் பெயரைச் சொல்லி திட்டியதாக அந்த மாணவரின் தந்தையால் 20-11-2024 தேதியிட்டு முதன்மை கல்வி அலுவலரிடம் ஒரு பொய்ப் புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இதற்கு முன்பு தலைமையாசிரியர் மாலதி அவர்கள் பணிபுரிந்த காஞ்சிபுரம் மாவட்டம் பெருநகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியராக இருந்த போதும் பள்ளி ஆசிரியர்களை பழி வாங்கும் செயலில் ஈடுபட்டதால் அப்பள்ளியிலிருந்து பல ஆசிரியர்கள் வேறு பள்ளிக்கு சென்றதால், அப்பள்ளியில் காலிபணியிடம் அதிகமாக ஏற்பட்டது.(பெண் ஆய்வக உதவியாளர் தற்கொலை முயற்சி மேற்கொண்டார்.பகுதி நேர உடற்கல்வி ஆசிரியரை பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.மூத்த முதுகலை ஆசிரியர் (ஆங்கிலம்) அவர் மீது காவல்நிலைத்தில் சமூக ஆர்வலர் ஒருவரை வைத்து பொய் புகார் கொடுத்துள்ளார்.)அதன் பின்பு சென்னை சைதாப்பேட்டை அரசு தகைசால் மேல்நிலைப்பள்ளிக்கு சென்று,அப்பள்ளியிலும் ஆசிரியர்களை பழி வாங்கும் செயலில் ஈடுபட்டது மட்டும் இல்லாமல் பல ஆசிரியரிடமும் உயர் அதிகாரிகளிடமும் விரோத போக்கை கடைப்பிடித்தால் அப்பள்ளியிலிருந்து நிர்வாக மாறுதல் செய்து தற்போதைய பள்ளிக்கு வந்துள்ளார்.தலைமையாசிரியை மாலதி அவர் கடந்த காலங்களில் பணிபுரிந்த பள்ளிகளில் ஆசிரியர்களை அச்சுறுத்தி மிரட்டி பழி வாங்கி வந்துள்ளார்.தலைமையாசிரியையின் செயல்கள் கல்வித்துறை உயர் அதிகாரிகளுக்கு நன்றாக தெரியும். ஆகையால் அப்பள்ளி தலைமையாசிரியை மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க எங்கள் சங்கம் சார்பாக வேண்டுகிறோம்.

இதற்கு பின்,9.12.24 அன்று பள்ளி தலைமை ஆசிரியை மாலதி தனது அறைக்கு சீனிவாசனை அழைத்து விசாரணை நடத்தியிருக்கிறார். அப்போது அங்கு மாணவனின் தந்தை மற்றும் உறவினர்கள்,சமூக ஆர்வலர் என்ற பெயரில் குபேந்திரன் என்பவர் அங்கிருந்துள்ளனர்.அவர்கள் அனைவரும் ஆசிரியர் சீனிவாசனிடம் விசாரணை என்ற பெயரில் ஒன்றரை மணி நேரம் அவரை குற்றத்தை ஒப்புக் கொண்டு மன்னிப்பு கடிதம் அளிக்குமாறு அச்சுறுத்தியிருக்கிறார்கள்.அதை 2 ஆசிரியைகள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர்.

இந்த சம்பவத்தை பார்த்த சக ஆசிரியர்கள்,தலைமை ஆசிரியை தனக்கு பிடிக்காத 2 ஆசிரியர்களை பழிவாங்குவதற்காக இந்த சம்பவத்தை அரங்கேற்றியிருக்கிறார் என்று முடிவு செய்து முதன்மை கல்வி அலுவலரிடம் மறுநாளே (10.12.24) புகார் அளித்துள்ளனர்.பள்ளியில் உள்ள 58 ஆசிரியர்களில் 45-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இந்த புகாரில் கையெழுத்திட்டுள்ளனர்.இதற்கு பிறகு,2 ஆசிரியைகள் பேசிய சில காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியானது.அதாவது பள்ளிக்குள் அத்துமீறி யாரோ நுழைந்து அந்த ஆசிரியைகள் பேசியதை வீடியோ எடுத்து,அதை வெட்டி,ஒட்டி திரித்து அவதூறாக வெளியிட்டுள்ளனர். இந்நிலையில்,பள்ளிக் கல்வி இணை இயக்குனர்(மேல்நிலைக் கல்வி) பள்ளிக்கு 13.12.24 அன்று நேரில் வந்து பொய்ப் புகாரால் பாதிக்கப்பட்ட 2 ஆசிரியர்களிடமும்,மாணவிகளிடமும் விசாரணை நடத்திச் சென்றார். தொடர்ந்து,சென்னை மாவட்ட கலெக்டரால் நியமிக்கப்பட்ட குழு, 18.12.24 அன்று பள்ளிக்கு வந்து சுமார் 150 மாணவ, மாணவியர்களிடமும், ஆசிரியர்களிடமும் நேரில் விசாரணை நடத்தியது.அந்த குழுவில்,சென்னை மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,முதன்மை கல்வி அலுவலர் ஆகியோர் இடம் பெற்றனர்.அவர்கள் ஆட்சியரிடம் அளித்த அறிக்கை இது வரை வெளியிடப்படவில்லை.மேலும், 3.1.25 அன்று பள்ளிக் கல்வி இணை இயக்குனர்,முதன்மை கல்வி அலுவலர்,மாவட்டக் கல்வி அலுவலர் ஆகியோர் பள்ளிக்கு வந்து அனைத்து ஆசிரியர்களிடமும்,மாணவர்களிடமும் விசாரித்து எழுத்து மூலமாக வாக்குமூலம் பெற்றுள்ளனர்.இந்த விசாரணை முடிவுகள் பற்றியும் எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

இதற்கிடையே,உடற்கல்வி ஆசிரியர் சீனிவாசன்,கணித பட்டதாரி ஆசிரியை மீனாட்சி ஆகியோர் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி,மீடியாக்களில் அவதூறு பரப்பியுள்ளனர்.பள்ளியில் அடுத்து என்ன நடக்கப் போகிறதோ என்ற அச்சத்தில் ஆசிரியர்கள் தினந்தோறும் வந்து செல்கின்றனர்.மேலும்,ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியைக்கு இடையே சுமூக உறவு காணப்படவில்லை.இறுதித் தேர்வு விரைவில் வரவுள்ள நிலையில் மாணவர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் பல கேள்விகளுக்கு இது வரை பதில் இல்லை.ஆசிரியர்கள் மீது அவதூறு பரப்பப்பட்டால்,அது தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளிக்குத்தானே இழுக்கு என்பது ஏன் தலைமை ஆசிரியருக்கு தெரியவில்லை? ஆசிரியர் சீனிவாசனிடம் தலைமை ஆசிரியை விசாரணை நடத்தும் போது, ஏன் வெளியாட்களை வைத்து கொண்டு கட்டப்பஞ்சாயத்து போல் நடத்தியிருக்கிறார்? பள்ளி ஒழுங்கு நடவடிக்கை குழுவில் உள்ள ஆசிரியர்கள் அல்லது உதவி தலைமை ஆசிரியர்களை அருகில் வைத்து கொண்டு விசாரணை நடத்தாதது ஏன்? பள்ளிக்குள் அத்து மீறி நுழைந்து ஆசிரியைகளை வீடியோ எடுத்தது யார்? அதை அவதூறாக திரித்து வெளியிட்டது யார்? தலைமை ஆசிரியை இது குறித்து காவல் துறையிலோ, பள்ளி கல்வித் துறைக்கோ இது வரை ஏன் புகார் கொடுக்கவில்லை? பள்ளி ஆசிரியர்கள் குறித்து அவதூறாக வெளியாகும் செய்திகளை தடுக்காமல், அவற்றை பரப்பிய சமூக ஆர்வலர்களை தலைமை ஆசிரியை தனது அலுவலகத்திற்கு அடிக்கடி அழைத்து பேசியது என்ன? இவை எல்லாம் முறைதானா?

இவ்வளவு விஷயங்களும் பள்ளிக் கல்வித் துறையில் உயர் பொறுப்புகளில் உள்ள அனைவருக்குமே தெரிந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? இன்று இந்த பள்ளியில் 2 ஆசிரியர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு நாளையே தமிழ்நாட்டில் எந்தவொரு ஆசிரியருக்கும் ஏற்படாது என்பதற்கு யார் உத்தரவாதம் அளிப்பது? இவற்றை எல்லாம் எங்கள் சங்கம் வேதனையுடன் சுட்டிக்காட்டுகிறது.

பதிப்பக செம்மல் க.கணபதி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் பலரும் இச்சமூகத்தில் உயர்ந்த பதவிகளில் பணியாற்றி வருகின்றனர் இப்பள்ளியின் ஆசிரியர்கள், பணியாற்றிய முன்னாள் இதற்கு காரணம் அதேபோல் இப்பள்ளியில் தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்களோடு ஒருங்கிணைந்து மாணவர்கள் நலனில் அக்கறை செலுத்தியதால் மாணவர்கள் இச்சமூகத்தில் நல் ஒழுக்கத்துடன் நல்ல பணிகளில் இன்று பணியாற்றி வருகின்றனர்.அதேபோல் பள்ளியில் தற்போது படிக்கும் ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவ மாணவிகள் இச்சமூகத்தில் முன்னேறி நல்ல ஒழுக்கத்துடன் நல்ல பணியில் அமர ஆசிரியர்களின் பங்கு மிக முக்கியமானது. தற்போது உள்ள தலைமை ஆசிரியரால் ஆசிரியர்களும் மன உளைச்சலில் உள்ளனர் பிற்காலத்தில் மாணவர்கள் நல் ஒழுக்கத்துடன் நல்ல மாணவர்களாக வளர ஆசிரியர்கள் பணியாற்ற விரும்பினாலும் அதனை தடுக்கும் வகையில் தற்போது உள்ள தலைமை ஆசிரியர் முரண்பாடு உடன் பணியாற்றுவதால் மாணவர்களின் நலன் கருதி அவரை மாற்று பள்ளிக்கோ அல்லது அவர் மீது நடவடிக்கை எடுக்கவோ பள்ளிக் கல்வித் துறை முன் வர வேண்டும் என்று மாணவர்களின் நலன் கருதி பள்ளி கல்வித்துறையை கேட்டு கொள்கிறோம்.இப்பள்ளி சென்னையின் மிக முக்கியமான பள்ளி என்பதை உணர்ந்து விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

எனவே,மேற்படி பள்ளியின் தலைமை ஆசிரியை மாலதி அவர்களை உடனடியாக அங்கிருந்து மாற்றம் செய்ய வேண்டும்.நேர்மையான, மிகவும் கண்டிப்பான ஒரு தலைமை ஆசிரியரை அங்கு நியமித்து, பள்ளியில் நடந்த விஷயங்கள் குறித்து முறையாக விசாரணை நடத்தி, வருங்காலத்தில் இது போன்ற நிகழ்வுகள் ஏற்படாத வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பாரம்பரியம் மிக்க பதிப்பகச் செம்மல் க. கணபதி அரசு மேல்நிலைப் பள்ளியின் பெருமைகளை மீட்டெடுக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்,அரசு செயலர், இயக்குனர் உள்ளிட்டோரை வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.