ஒகேனக்கலில், மீன் வள ஆய்வாளர் அலுவலகத்தில், உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர் பயிற்சி.

தர்மபுரி மாவட்ட சுற்றுலா தளமான ஒகேனக்கலில் மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பாக மீன் வறுவல் விற்பனையாளர்களுக்கான, சிறப்பு மாற்று வாழ்வாதார திட்டம் மதிப்பு கூட்டிய மற்றும் உடன் உண்ணக்கூடிய மீன் உணவுப் பொருள்கள் தயாரிப்பு தொழில்நுட்ப பயிற்சி கடந்த சில தினங்களாக மீன்வள ஆய்வாளர் அலுவலக பயிற்சி கூட அரங்கில் நடைபெற்று வருகிறது. பயிற்சியின் ஒரு பகுதியாக உணவு பாதுகாப்பு துறை சார்பாக உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர் அடிப்படை பயிற்சி நேற்றைய தினம் நடைபெற்றது.

தொப்பையார்அணை மீன் வள ஆய்வாளர் திருமதி. கோகிலவாணி அவர்கள் வரவேற்புடன், பென்னாகரம் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் மற்றும் பென்னாகரம் மீன்வள ஆய்வாளர் வேலுச்சாமி முன்னிலையில் உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் கைலாஷ்குமார் மற்றும் மீன்வளம் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் விஜயராகவன் ஆகியோர் தலைமையில் , விற்பனையாளர்களுக்கான உணவு பாதுகாப்பு அடிப்படை பயிற்சி உணவு பாதுகாப்பு துறையால் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி பார்ட்னர் இ.பி. இன்ஃபோவேஸ் பயிற்றுநர் காமேஸ்பால்ராஜ் வழங்கினார்
மாவட்ட நியமன அலுவலர் , தன் தலைமை உரையில் சுற்றுலாத்தலமான ஒகேனக்கலுக்கு தர்மபுரி மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகள், அண்டை மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை தந்து இயற்கை அழகை கண்டு ரசித்து நீர்வீழ்ச்சிகளில் குளித்து , இங்குள்ள மீன் வறுவல் மற்றும் உணவு அருந்தி மகிழ்ச்சியாக செல்கின்றனர்.
அவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு பயணிக்கும் போதோ பயணித்த பின்பு அவர்கள் உடல் நலம் உணவினால், மீன் இறைச்சிகளால் உடல்நல குறைபாடுகள், மாறுபாடுகள் ஏற்படாமல் இருக்க உணவை தரமாகவும்,சுவையாகவும் உண்ணக்கூடியதாகவும் வழங்கிட மாவட்ட ஆட்சியர் அவர்கள் பல்வேறு அறிவுரைகள் வழங்குதல், நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டதன் அடிப்படையில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வுகள், பயிற்சிகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் மீன் இறைச்சிகளில், வறுவல்களில் செயற்கை நிறமூட்டிகள் மற்றும் ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் மீண்டும் பயன்படுத்துதல் உணவகங்கள், மீன் வறுவல் கடைகளில் காணப்படுகின்றன. செயற்கை நிறமூட்டிகள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் இதனால் கேன்சர்,வயிற்று கோளாறு,அலர்ஜி ஒவ்வாமை, ஏற்பட ஏதுவாகிறது ஆகவே எக்காரணம் கொண்டும் மீன் இறைச்சி மற்றும் இறைச்சி வகைகளில் கண்டிப்பாக செயற்கை நிறமூட்டி தவிர்த்தல் வேண்டும் எனவும் மேலும் பலமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெயால் செய்த உணவு, இறைச்சிகளை உண்பதால் கெட்ட கொலஸ்ட்ரால், இருதயக் கோளாறு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட கோளாறுகள் ஏற்பட வழிபடுகின்றன ஆகவே ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெய் மீண்டும் மீண்டும் பயன்படுத்துதல் கூடாது அந்த எண்ணையை உணவு பாதுகாப்புத் துறையால் அங்கீகரிக்கப்பட்ட ரூகோ டீலரிடம் அளித்து அதற்குண்டான தொகை பெற்றுக்கொள்ள வழிவகை உள்ளது. பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

தரமான புதிய மீன்களை வாங்குவது எப்படி என இனம் காண்பது எப்படி என தெரிவிக்கையில்,
மீன்களை வாங்கும் போது கண்களை பார்த்தால் தெளிவாக கண்ணாடி போன்று இருத்தல் வேண்டும், செதில்கள் தூக்கி பார்க்கும் போது இளம் சிவப்பு நிறத்தில் காணுதல் வேண்டும் மேலும் மீனை தலைகீழாக பிடித்து உலுக்கும்போது செதில்கள் ரோமங்கள் ஏதும் கீழே விழாமல் உதிராமல் இருத்தல் , மேலும் மையப் பகுதி அழுத்திப் பார்க்கும்போது பந்து போன்ற அழுத்தப்பட்ட பகுதி மீண்டும் திரும்ப வேண்டும். மேலும் மீனை நுகர்ந்து பார்த்தால் கெட்ட வாடை ஏதும் வீசுதல் கூடாது இவற்றில் இருந்து மீன்களை புதிய மீன்கள் தரம் கண்டறிந்து வாங்குதல் வேண்டும். மேலும் அதிகபட்சம் இரண்டு அல்லது மூன்று நாட்கள் வரை மைனஸ் ஐந்து டிகிரிக்குள் மீன்களை குளிர்பதன பெட்டியில் வைத்து உபயோகப்படுத்தலாம். வைக்கும் குளிர் பதனப் பெட்டியில் மீன் தவிர வேறு ஏதும், சமைத்த பொருட்களோ வைக்குதல் கூடாது. மேலும் ஐஸ் முக்கியமாக பாதுகாக்கப்பட்ட குடிநீரினால் செய்த ஐஸ்கட்டிகளாக இருத்தல் கண்காணிக்க வேண்டும் தற்போது ஒரு சில இடங்களில் மீன்கள் கெடாமல் இருக்க ஐஸ் பார்கள் (கட்டிகள்) தயாரிக்கும் போதே ஃபார்மலின் திரவத்தை கலந்து ஐஸ் கட்டி தயாரிக்கப்படுவதாகவும் எனவே அதை கண்காணித்து உபயோகப்படுத்த விழிப்புணர்வு செய்தனர். பென்னாகரம் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் தன்உரையில் பொட்டலம் இடப்பட்ட உணவு பொருள்கள், மசாலா பொருட்கள், சமையல் எண்ணெய் போன்றவை உரிய உணவுப் பொருள் விதிகள் உணவு பெயர், தயாரிப்பு முகவரி, தயாரிப்பு தேதி,முடிவு தேதி, உணவு பாதுகாப்பு உரிம எண், விலை, எடை எண்ணிக்கை, உட்காரணிகள், சைவ அசைவ குறியீடு மற்றும் நுகர்வோர் தொடர்பு எண் இருத்தல் வேண்டும் என உணவு பொருள் பாக்கெட்டுகளைக் கொண்டு விளக்கம் அளித்தார்.
சுமார் 40க்கும் மேற்பட்ட விற்பனையாளர்கள் நிகழ்வில் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உணவு பாதுகாப்பு அலுவலர் ,மீன் வள மேற்பார்வையாளர்கள் மற்றும் உதவியாளர்கள் செய்திருந்தனர். நிறைவாக ஒன்றிய மீன்வள ஆய்வாளர் வேலுசாமி நன்றி உரை யாற்றினார்.