
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், கோமுகி அணையிலிருந்து மாவட்ட
ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த், சங்கராபுரம் சட்டமன்ற
உறுப்பினர் தா.உதயசூரியன் ஆகியோர் விவசாய
பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைத்தார்கள். மேலும் நிறைந்த மனது நிகழ்ச்சியில்
விவசாயிகளுடன் கலந்துரையாடினார்கள்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க,
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், கோமுகி நதி அணையிலிருந்து 07.11.2025
நேற்று முதல் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைக்கப்படுகிறது. இத்தண்ணீர்
திறப்பினால் பழைய பாசனத்தில் 5,860 ஏக்கர் பரப்பளவு நிலமும், புதிய பாசனத்தில் 5,000
ஏக்கர் பரப்பளவு நிலமும் என மொத்தம் 10,860 ஏக்கர் பரப்பளவு நிலம் பாசன வசதி பெற்று
பயனடைகிறது. 07.11.2025 முதல் 21.11.2025 வரை 15 நாட்களில் பழைய பாசனத்திற்கு 60
கன அடி வீதமும், புதிய பாசனத்திற்கு 50 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்படுகிறது.
22.11.2025 முதல் 05.12.2025 வரை பழைய பாசன வாய்காலில் 120 கன அடியும்,
புதிய பாசன வாய்காலில் 100 கன அடியும் தண்ணீர் விட தமிழக அரசு முடிவு செய்து நீர்
வெளியேற்றப்படவுள்ளது. இந்த அணையின் மொத்தம் நீர் மட்டம் 46 அடியாகும்.
அணையின் மொத்த கொள்ளளவு 560.96 மி.க. அடியாகும். அணையின் தற்போதைய நீர்
மட்டம் 44 அடியாகும்.
இவ்வணையிலிருந்து தற்போது தண்ணீர் திறப்பதன் மூலம் பழைய பாசன பரப்பில் 33
கிராமங்களும், புதிய பாசன பரப்பில் 7 கிராமங்களும், 11 அணைக்கட்டுகளும் என சுமார்
40-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பயன்பெறுகின்றன. கோமுகி அணையிலிருந்து
நேற்றையதினம் தண்ணீர் திறக்கப்பட்டதையொட்டி வடக்கனந்தல் கிராமத்தைச் சேர்ந்த
திரு.சுப்ரமணியன், திரு.பழனி ஆகிய விவசாயிகள் தமிழக அரசுக்கு நிறைந்த மனதுடன்
நன்றி தெரிவித்தனர்.
மேலும் கோமுகி அணையின் தற்போதைய நீர் இருப்பின் மூலம் 29 நாட்கள் வரை
தண்ணீர் பாசனத்திற்கு வழங்க இயலும். மேலும் நீர் வரத்திற்கேற்ப தண்ணீர் பாசனம் காலம்
வரை (பிப்ரவரி மாதம் முடிய) தொடர்ந்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பாசன விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக மகசூல் செய்து நல்ல
வருமானம் ஈட்ட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், கண்காணிப்பு பொறியாளர் (நீர்வளத்துறை) வெள்ளாறு வடிநில
வட்டம் (கடலூர்) ஆர்.மரியாசூசை, உதவிசெயற்பொறியாளர் (நீர் வளத்துறை)
வெள்ளாறு வடிநில உபகோட்டம் (கள்ளக்குறிச்சி) பி.பார்த்திபன், உதவி ஆட்சியர்
(பயிற்சி) மரு.சுபதர்ஷினி,
வடக்கனந்தல் பேரூராட்சி தலைவர்
தா.பன்னீர்செல்வம், ஒன்றியக்குழுத் தலைவர்கள் சந்திரன் (கல்வராயன்மலை),
அலமேலு ஆறுமுகம் (கள்ளக்குறிச்சி), நீர்வளத்துறை உதவி பொறியாளர்கள்,
பாசன சங்க தலைவர்கள், உறுப்பினர்கள், விவசாய பெருமக்கள், உள்ளாட்சி அமைப்பின்
பிரதிநிதிகள் உள்ளிட்டப் பலர் கலந்துக் கொண்டனர்.
