தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியைச் சேர்ந்த காதர் பாட்சா மற்றும் இவருடைய மனைவி ஷபானா ஆகிய இருவரும் மாற்றுத்திறனாளிகள். மாற்றுத்திறனாளிகளுக்கான பல்வேறு உரிமைகளை தர்மபுரி மாவட்ட நிர்வாகம் மற்றும் அரூர் நகராட்சி நிர்வாகம் தொடர்ந்து புறக்கணித்து வருவதாக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில், நேற்று தர்மபுரி வருகை புரிந்த தமிழக முதல்வர் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டு பின்பு சேலம் ஏர்போர்ட்டுக்கு புறப்பட்டார்.
அப்போது சேலம் கமலாபுரம் விமான நிலையத்தின் நுழைவாயிலின் முன்பு இருந்த மாற்றுத்திறனாளி பெண்ணான ஷபானா தமிழக முதல்வரிடம் மனு ஒன்றை அளித்துள்ளார்.
இந்த மனுவில் மொரப்பூர் அருகே உள்ள சுண்டாங்கிப்பட்டி சமத்துவபுரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட நிலப்பரப்புகளில் பட்டா வழங்குவதிலும், கலைஞரின் கனவு இல்ல திட்டம் மூலம் வீடுகள் வழங்குவதிலும் ஏற்பட்ட தாமதங்களை சரி செய்ய வேண்டும், அரூர் நகராட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்டிக்கடை அமைத்து நடத்த அனுமதி வழங்க அரசு சார்பில் அரசாணை இருந்தும் அதனை பின்பற்றாமல் நகராட்சி நிர்வாகம் செயல்பட்டு வருவதாகவும், மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு உட்பட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை உள்ளடக்கிய மனுவை அளித்து கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளார்.
