மலைக்கிராம மக்களின் நீண்டகால கோரிக்கை நிறைவேறுமா? – சாலை வசதி இல்லாமல் தவிக்கும் பழங்குடியின மக்கள் மீண்டும் அரசிடம் முறையீடு…

தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், கோட்டப்பட்டி முதல் சிடலிங் வரை உள்ள மலைக்கிராமம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 18-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசித்து வரும் பழங்குடியின மக்கள், பல ஆண்டுகளாக அடிப்படை சாலை வசதி இன்றி கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். பலமுறை அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவித நிரந்தர நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறி, மீண்டும் சாலை அமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சிடலிங் மலைப்பகுதியில் உள்ள கிராமங்களில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் தலைமுறைகளாக வசித்து வருகின்றனர். இவர்களின் முக்கிய வாழ்வாதாரம் விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் வனப்பொருட்களை சேகரித்து விற்பனை செய்வதாகும். ஆனால், மலைப்பகுதிக்கு செல்லும் பாதை மிகவும் மோசமான நிலையில் இருப்பதால், அன்றாட வாழ்க்கையே பெரும் சவாலாக மாறியுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக, பழங்குடியினர் மருத்துவ மனை உள்ளது இதில் கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள் மற்றும் உடல்நலக்குறைவு ஏற்படும் நோயாளிகளை அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியாத நிலை நிலவுகிறது. சாலை வசதி இல்லாததால் ஆம்புலன்ஸ் வாகனங்கள் நேரடியாக கிராமங்களுக்குள் செல்ல முடியாமல், நோயாளிகளை நீண்ட தூரம் தூக்கிச் சென்று வாகனங்களில் ஏற்ற வேண்டிய அவல நிலை ஏற்படுவதாக பொதுமக்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.

இதேபோல், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் தினமும் பல கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். மழைக்காலங்களில் பாதைகள் சேறும் சகதியுமாக மாறுவதால் பள்ளிக்குச் செல்வது மிகவும் சிரமமாக இருப்பதாகவும், இதனால் மாணவர்களின் கல்வியும் பாதிக்கப்படுவதாக பெற்றோர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மழைக்காலங்களில் நிலைமை மேலும் மோசமடைகிறது. சாலைகள் முற்றிலும் சேதமடைந்து வாகனப் போக்குவரத்து துண்டிக்கப்படுவதால், அத்தியாவசிய பொருட்கள் கூட கிராமங்களுக்கு எளிதில் கொண்டு செல்ல முடியாத சூழல் உருவாகிறது. மருத்துவ அவசரநிலை, கல்வி, வேலைவாய்ப்பு, அரசு சேவைகள் உள்ளிட்ட அனைத்திலும் மக்கள் பாதிப்பை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்தப் பிரச்சினையை தீர்க்க பலமுறை தமிழக அரசுக்கும், தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கும் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளதாகவும், மாவட்ட குறைதீர்க்கும் நாள் கூட்டங்களிலும் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும், தேர்தல் காலங்களில் சாலை அமைத்து தருவதாக பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டாலும், தேர்தல் முடிந்த பிறகு அவை செயல்படுத்தப்படுவதில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வுக்காக வந்து நிலைமையை பார்வையிட்டு செல்வதாகவும், விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளிப்பதாகவும், ஆனால் அதன்பிறகு எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

சிடலிங் மலைப்பகுதிக்கும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கும் தரமான தார்சாலை அமைக்கப்பட்டால், கல்வி, மருத்துவம், போக்குவரத்து, குடிநீர், அரசு நலத்திட்டங்கள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் எளிதில் கிடைக்கும். மேலும், பழங்குடியின மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் இது பெரும் துணையாக அமையும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

எனவே, பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள இந்த கோரிக்கையை இனியும் தாமதிக்காமல் தமிழக அரசும், தருமபுரி மாவட்ட நிர்வாகமும் உடனடியாக பரிசீலித்து, சிடலிங் மலைக்கிராமம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 18-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு தரமான சாலை வசதியை ஏற்படுத்த வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் ஒருமித்த கோரிக்கையாக உள்ளது.