
“ஒரு நலத் திட்டத்தின் வெற்றி, அது அறிவிக்கப்படுவதில் இல்லை;
அது நேர்மையாக நடைமுறைப்படுத்தப்படுவதில்தான் இருக்கிறது.”
உழைக்கும் தொழிலாளர்களின் வியர்வையில் உருவாகும் ஒவ்வொரு ரூபாய் வருமானமும், அவர்களின் குடும்பத்தின் எதிர்கால நம்பிக்கையோடு பின்னிப் பிணைந்திருக்கிறது. அந்த நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையில்தான் அரசு பல்வேறு தொழிலாளர் நலத் திட்டங்களை உருவாக்கியுள்ளது. திருமண உதவி, மகப்பேறு உதவி கல்வி உதவி, இயற்கை மரண நிவாரணம், விபத்து நிவாரணம் ஓய்வூதியம் என தொழிலாளர்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் அவர்களுக்குத் துணையாக நிற்கும் நோக்கத்தோடு தொழிலாளர் நல வாரியம் செயல்பட்டு வருகிறது.
ஆனால், இந்த நலத் திட்டங்கள் உண்மையான பயனாளிகளை எளிதாகச் சென்றடைய வேண்டுமெனில், அதற்கான பதிவு நடைமுறைகளும் முழுமையான வெளிப்படைத்தன்மையுடனும் பொறுப்புணர்வுடனும் அமைய வேண்டும். அந்த நடைமுறைகளில் சிறு அலட்சியம்கூட, ஒரு தொழிலாளியின் உரிமையைப் பறிக்கும் அளவிற்கு பெரிய விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
இந்தச் சூழ்நிலையில்தான் திருநெல்வேலி மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (சமூகப் பாதுகாப்புத் திட்டம் பொறுப்பு) அவர்கள் வெளியிட்டுள்ள எச்சரிக்கை முக்கியத்துவம் பெறுகிறது. தொழிலாளர் நல வாரியத்தில் புதிய உறுப்பினர் பதிவு செய்வதற்கும், பல்வேறு உதவித் தொகைகளைப் பெறுவதற்குமான கேட்பு மனுக்களுடனும் இணைக்கப்படும் பணிச்சான்று உள்ளிட்ட விண்ணப்பங்கள் முழுமையாகப் பூர்த்தி செய்யப்படாமல், தொழிற்சங்கத்தின் முத்திரை மற்றும் கையொப்பத்துடன் இ-சேவை மையங்களில் விற்பனை செய்யப்படுவது அல்லது பயன்படுத்தப்படுவது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்கள் மற்றும் இ-சேவை மற்றும் பொது சேவை மையங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெளிவாக எச்சரித்துள்ளார்.
இந்த அறிவிப்பை ஒரு சாதாரண அலுவல் சுற்றறிக்கையாகக் கருதிவிட முடியாது. இது, தொழிலாளர் நல வாரியத்தின் செயல்பாடுகளில் ஒழுங்கையும் பொறுப்பையும் நிலைநிறுத்தும் நிர்வாக உறுதிப்பாட்டின் வெளிப்பாடாகும்.
தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்யப்படும் ஒவ்வொரு விண்ணப்பமும் வெறும் காகிதம் அல்ல அது ஒரு தொழிலாளியின் அடையாளம் அவரது உழைப்பின் சான்று அவரது குடும்பத்தின் எதிர்கால நலனுக்கான அடித்தளம். அந்த விண்ணப்பத்தில் தவறான தகவல் இடம்பெற்றாலோ, முழுமையற்ற விவரங்கள் சமர்ப்பிக்கப்பட்டாலோ அல்லது பொறுப்பற்ற முறையில் கையாளப்பட்டாலோ அதன் பாதிப்பு ஒரு ஆவணத்தில் முடிவதில்லை; அது ஒரு குடும்பத்தின் வாழ்க்கையையே பாதிக்கக்கூடும்
இன்று பல இடங்களில் தொழிலாளர்கள் விதிமுறைகளை முழுமையாக அறியாத சூழலில் இடைத்தரகர்களை நம்ப வேண்டிய நிலை ஏற்படுகிறது. அந்த அறியாமையைப் பயன்படுத்தி முழுமையாகப் பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் முன்கூட்டியே முத்திரையிடப்பட்ட படிவங்கள். சரிபார்க்கப்படாத ஆவணங்கள் போன்றவை புழக்கத்தில் இருந்தால், அது அரசின் நலத் திட்டங்களின் நோக்கத்தையே சிதைக்கும் அபாயத்தை ஏற்படுத்தும். இதுபோன்ற செயல்கள் நிகழ்ந்தால் அவற்றைத் தடுக்க வேண்டியது அரசின் கடமையாகும்.
தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக உருவாக்கப்பட்ட அமைப்புகள் தொழிலாளர்களுக்கும் அரசுக்கும் இடையே நம்பிக்கையின் பாலமாக இருக்க வேண்டிய அவை, எந்த நிலையிலும் விதிமுறைகளை மீறும் செயல்களுடன் தொடர்புபடுத்தப்படக் கூடாது. அதேபோல், இ-சேவை மற்றும் பொது சேவை மையங்களும் அரசின் மின்னணு சேவைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பொறுப்பை வகிக்கின்றன எனவே அவர்கள் செயல்பாடுகளும் விதிமுறைகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டியது அவசியம்.
திருநெல்வேலியில் வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை ஒரு மாவட்டத்தின் எல்லைக்குள் மட்டுமே முடங்கிவிடக் கூடாது. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தொழிலாளர் நல வாரியப் பதிவுகள் குறித்து சிறப்பு ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும். புதிய உறுப்பினர் பதிவுகள் உதவித் தொகை விண்ணப்பங்கள், பணிச்சான்றுகள், தொழிற்சங்கங்களின் பரிந்துரைகள், அனைத்தும் தணிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
சட்டம் என்பது தவறு செய்த பிறகு தண்டனை வழங்குவதற்காக மட்டுமல்ல, தவறு நடைபெறாமல் தடுப்பதற்கும். எனவே, முறைகேடுகள் இருப்பதாக ஆதாரங்களுடன் கண்டறியப்பட்டால், எந்த தொழிற்சங்கமாக இருந்தாலும், எந்த இ-சேவை மற்றும் பொது சேவை மையமாக இருந்தாலும். சட்டத்தின் முன் சமமாகக் கருதி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதுவே நல்லாட்சியின் அடையாளம்
நிர்வாகத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை வர வேண்டுமெனில், விதிகள் அனைவருக்கும் ஒரே மாதிரியாக அமல்படுத்தப்பட வேண்டும். தொழிலாளர்களின் உரிமை யாருடைய தயவாலும் கிடைப்பதல்ல; அது சட்டம் வழங்கிய உரிமை. அந்த உரிமையைப் பாதுகாப்பது அரசின் கடமை: அதை மதிப்பது தொழிற்சங்கங்களின் பொறுப்பு; அதைச் சரியாகச் செயல்படுத்துவது நிர்வாகத்தின் பொறுப்பாகும்.
திருநெல்வேலியில் ஒலித்திருக்கும் இந்த நிர்வாக எச்சரிக்கை, தமிழகம் முழுவதும் ஒரு புதிய நிர்வாக ஒழுங்கின் தொடக்கமாக மாற வேண்டும். தொழிலாளர் நலத் திட்டங்கள் வியாபாரப் பொருளாக அல்ல, சமூக நீதியின் அடையாளமாகத் திகழ வேண்டும். அப்போதுதான் உழைக்கும் மக்களின் நம்பிக்கையும், அரசின் நலத் திட்டங்களின் மதிப்பும் என்றும் நிலைத்திருக்கும்.
