
சர்வதேச அளவில் புகழ் பெற்ற 41-வது ‘ஷெல் ஈக்கோ-மேரத்தான்’ பசிபிக் போட்டிகள், கத்தார் நாட்டில் இம்மாத இறுதியில் நடைபெறவுள்ளது. மிக குறைந்த எரிபொருளில் அதிக ஆற்றலுடன் இயங்கக்கூடிய வாகனங்களை உருவாக்கும் மாணவர்களுக்கான சர்வதேச போட்டியாக இது உள்ளது. மேலும் வாகனத்துறையில் வழக்கமான எரிபொருள் அல்லாது நிலைத்தன்மை கொண்ட எரிபொருள் மூலம் அதிக நேரம் திறம்பட இயங்கும் வாகனங்களை உருவாக்கும் போட்டியாகவும் உள்ளது இந்த போட்டியில், கலந்து கொள்ள கோவை குமரகுரு கல்வி நிறுவனங்களில் பயிலும், 14 மாணவர்கள் கொண்ட அணியான ‘டீம் ரிநியூ’, ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் தங்களின் புதிய முன்மாதிரி வாகனத்தை உருவாக்கியுள்ளனர். இந்த அணியானது இப்போட்டியில் ஹைட்ரஜன் எரிபொருள் பிரிவில் இந்தியா சார்பாகப் பங்கேற்கும் ஒரே அணியாக உள்ளது இந்திய நாட்டிற்க்கே பெருமையை சேர்க்கும் வகையில் உள்ளது. இந்த நிலையில் மாணவர்கள் வடிவமைத்த வாகனத்தின் அறிமுக நிகழ்ச்சி குமரகுரு கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் ப்ரோபெல் இ.வி. நிறுவனத்தின் தொழில்நுட்ப ஆலோசகர் குறிச்சி குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மாணவர்களை வாழ்த்தினார். குமரகுரு கல்வி நிறுவனங்களின் தலைவர் சங்கர் வாணவராயர் இந்த வாகனத்தை அறிமுகம் செய்து வைத்து அதன் சோதனை ஓட்டத்தையும் துவக்கி வைத்தார்.
தொடர்ந்து இது குறித்து குமரகுரு கல்லூரி பொறியியல் துறையை சேர்ந்த மாணவர்களான அஸ்வின் கார்த்திக், அணி கேப்டன், ஷோபிகா ஆகியோர் கூறியதாவது.. ஹைட்ரஜன் எரிபொருள் பிரிவு என்பது குறைந்த எரிபொருளில் அதிக மைலேஜ் பெறுவதை அடிப்படையாகக் கொண்டது. இதற்காக நாங்கள் இந்த வாகனத்தை ஆரம்பம் முதல் முழுமையாகத் தாங்களே வடிவமைத்துள்ளனர். வாகனத்தின் ஏரோடைனமிக்ஸ் திறனுக்காக, மீன்கொத்தி பறவையின் அலகு போன்ற வடிவம் இதற்காகத் தேர்ந்தெடுத்து, வாகனத்தின் எடையைக் குறைத்து வலிமையை அதிகரிக்க ‘பசால்ட் ஃபைபர் – பிவிசி ஃபோம்’ கலவைப் பொருட்களை பயன்படுத்தி உள்ளதாகவும் இந்த ஆண்டுக்கான போட்டியில் எங்களது வாகனம் நிச்சயம் வெற்றி பெறும் என நம்புவதாக தெரிவித்தனர்.
