
மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி அருகே உள்ள பி.சுப்பல்லாபுரம் கிராமத்தில்,ட்ரோன் தொழில்நுட்பப் பயிற்சி.
நவீன தொழில்நுட்பங்கள் வேளாண்மையில் நாளுக்கு நாள் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. அந்த வகையில், விவசாய உற்பத்தியை உயர்த்தவும், செலவுகளை குறைக்கவும் உதவும் “ட்ரோன் தொழில்நுட்பம்” குறித்து விவசாயிகளுக்கான பயிற்சி நிகழ்ச்சியை மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இறுதி ஆண்டு பயிலும் மாணவி நிவேதா ஸ்ரீ. ப, ஊரக வேளாண் பணி அனுபவத் திட்டதின் (RAWE) கீழ் நடத்தினார்.
இந்த பயிற்சி நிகழ்ச்சியில், வேளாண்மையில் ட்ரோன் பயன்பாட்டின் அவசியம், அதன் செயல்முறை மற்றும் பயன்கள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. குறிப்பாக பயிர்களில் மருந்து தெளிப்பு, உரம் தெளிப்பு, பயிர் கண்காணிப்பு, பூச்சி மற்றும் நோய் தாக்கம் கண்டறிதல், நில அளவீடு போன்ற பணிகளில் ட்ரோன் எவ்வாறு பயன்படுகிறது என்பதை கூறினர்.
ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பதால் குறைந்த நேரத்தில் அதிக பரப்பளவில் தெளிப்பு செய்ய முடிவதுடன், மருந்து செலவு குறைகிறது. பயிர்களுக்கு தேவையான அளவு மருந்து மட்டும் தெளிக்கப்படுவதால் சுற்றுச்சூழல் பாதுகாப்பும் உறுதியாகிறது.
இந்த பயிற்சி நிகழ்ச்சி விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. ட்ரோன் தொழில்நுட்பம் எதிர்கால வேளாண்மையின் முக்கிய அங்கமாக விளங்கும் என்பதில் விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனர். இத்தகைய பயிற்சி நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
