
உலகம் முழுவதும் அக்டோபர் மாதம், மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. இந்த மாதத்தில் மார்பகப் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தும் வகையிலும், புற்று நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தன்னம்பிக்கை அளிக்கும், மாதமாகவும் கருதப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை, புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பாக மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு தகவல்கள் அடங்கிய இன்ஸ்டாகிராம் வீடியோ தொகுப்புகள் வெளியீட்டு விழா நிகழ்ச்சி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. தொடர்ச்சியாக, 23 வது பதிப்பாக நடைபெறும் இந்த விழிப்புணர்வு வீடியோ தமிழ் மற்றும் ஆங்கில மொழி களில் வெளியிட பட்டது
இதனை ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குனரும், மருத்துவவருமான குகன், நவ இந்துஸ்தான் ஸ்பின்னர்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பிரியங்கா கார்த்திகேயினி, மற்றும் எஸ்.என்.ஆர் அன்ட் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சுந்தர், ஆகியோர் இணைந்து வெளியிட்டனர்
பின்னர், செய்தியாளர்களை சந்தித்து பேசிய டாக்டர் குகன் கூறுகையில்… இந்தியாவில் 50 வயதுக்குட்பட்ட பெண்களிடையே மார்பக புற்றுநோய் அதிகரித்து வருவதாகவும், சுமார் 35 வயதுள்ள பெண்களிடையே இந்த நோய் ஏற்படுவது இரண்டு சதவீதத்திலிருந்து நான்கு சதவிகிதமாக உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார். மருத்துவ ஆய்வின்படி 2018 ஆம் ஆண்டில் இந்தியாவில் ஒரு லட்சத்து, 68 ஆயிரம் பேருக்கும் மேற்பட்ட பெண்கள் மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், இந்த எண்ணிக்கை 2023ல், இரண்டு லட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேல் அதிகரித்து உள்ளது எனவும் அவர் தெரிவித்தார். புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பொதுமக்கள் மத்தியில் போதிய அளவு இல்லை என்பதே இதற்கு காரணம் என்று கூறிய அவர், ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் இதற்காக ஆண்டு தோறும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாகவும் கூறினார். இந்த வீடியோ குறுந்தகடு வெளியீட்டு விழா நிகழ்ச்சியில், எஸ்.என்.ஆர் அறக்கட்டளையின் தலைமை செயல் அதிகாரி சி.வி ராம்குமார், தலைமை நிர்வாக அதிகாரி மகேஷ் குமார், ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனையின் மருத்துவ இயக்குனர் ராஜகோபால், மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் எஸ் அழகப்பன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
