அரூர் அடுத்த கெளாப்பாறை கிராமத்தில் முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து பள்ளி மாணவர்கள் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த கெளாப்பாறை கிராமத்தில் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக முறையான குடிநீர் வழங்காததால் பள்ளி குழந்தைகள் அலுவலக ஊழியர்கள் தாய்மார்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டு வந்தனர். மேலும் தங்கள் பகுதிக்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீரும் வருவதில்லை, வீட்டுக்கு வீடு தனிப்பட்ட குழாய் மூலம் தண்ணீர் வழங்கப்படுவதற்கான செயல்படுத்தப்பட்ட பாரத பிரதம மந்திரியின் ஜல்ஜீவன் திட்டமும் முறையாக செயல்படுத்தப்படாததால் தண்ணீர் பற்றாக்குறை நீடித்து வருவதாகவும் எனவே இது குறித்து புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவிக்கும் கிராம மக்கள் பள்ளி மாணவ மாணவிகளுடன் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த பஞ்சாயத்து நிர்வாகம், வட்டார வளர்ச்சி அலுவலர், மற்றும் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி பின்பு ஓரிரு நாட்களில் செயல்படுத்தி தருவதாகவும், தண்ணீர் பிரச்சனையை தீர்வு காணும் வகையில் நடவடிக்கை மேற்கொள்வோம் என தெரிவித்ததின் பேரில் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.