இந்தியாவின் முதல் மற்றும் மிகப்பெரிய டைனஸ்டி லீக் டிஎன்டிபிஎல் சீசன் 1 எனும் பிக்கிள்பால் போட்டிகள், கோவையில் பிரம்மாண்டமாக நடைபெற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன..

கோவையில் உள்ள எஸ்டி ஸ்போர்ட்ஸ் இன்டோர் கோர்டில் இந்தியாவின் முதல் மற்றும் மிகப்பெரிய டைனஸ்டி லீக் தொடராகக் கருதப்படும் தமிழ்நாடு பிக்கிள் பால் டைனஸ்டி லீக் சீசன் 1, மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.100 வீரர்கள், 10 அணித் தலைவர்கள் மற்றும் 10 அணியின் உரிமையாளர்கள் கலந்து கொண்ட இந்த தொடக்க விழா விளையாட்டு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த தொடரின் தலைப்பு ஆதரவாளராக இந்திய கார் பந்தய சாம்பியனும், விஎன்ஏ க்ரூப்ஸ் மற்றும் டிஐஏ டைமண்ட்ஸ் நிறுவனங்களின் உரிமையாளருமான பாலபிரசாத் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார். விளையாட்டுத் துறையின் வளர்ச்சிக்காக அவர் தொடர்ந்து வழங்கி வரும் ஆதரவும் பங்களிப்பும் பாராட்டப்பட்டது.
மேலும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக திரைப்பட இயக்குநர் என். கிருஷ்ணா, உலகின் நம்பர் 1 விர்சுவல் ரியால்ட்டி டென்னிஸ் வீரர் விமல்ராஜ் ஜெயச்சந்திரன், நடிகர் மற்றும் தயாரிப்பாளர் அதவா ஈஸ்வரா, சர்வதேச பயிற்சியாளர் ராக்கி ராகவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வீரர்களை உற்சாகப்படுத்தினர்இரண்டு நாட்கள் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த லீக் போட்டியில் வீரர்கள் உற்சாகமாக பங்கேற்று போட்டிகளை சிறப்பாக நிறைவு செய்தனர். இறுதிப்போட்டியில் கவுதம் தலைமையிலான மற்றும் கிஷோர், திவ்யா, சர்வேஷ் ஆகியோர் உரிமையில் இருந்த செம்மொழி எம்பயர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. ரன்னர்-அப் பட்டத்தை சேலம் ராமகிருஷ்ணன் ரங்கராஜ் உரிமையிலான பல்லவா டைட்டன்ஸ் அணி, கேப்டன் சந்தீப் தலைமையில் கைப்பற்றியது.
இந்திய பிக்கிள் பால் வரலாற்றில் முக்கியமான இடத்தைப் பெற்ற இந்த தொடர், அடுத்த சீசனில் இன்னும் பிரம்மாண்டமாக திரும்பும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.