கள்ளக்குறிச்சியில் தீபாவளிப் பண்டிகையையொட்டி கதர் துணிகள் சிறப்பு விற்பனை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில், கதர் கிராமத்தொழில் வாரியம் சார்பில் தீபாவளி சிறப்பு விற்பனை தொடக்க விழா, ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக, ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த், மகாத்மா காந்தி திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்த பின், குத்துவிளக்கேற்றி சிறப்பு விற்பனையைத் தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் கூறுகையில், கதர் ஒரு வாழ்க்கை தத்துவம். கதர் என்பது வெறும் நூல் இலைகளால் ஆன துணி மட்டுமல்ல, அது சுதந்திரப் போராட்டக் களத்தில் போராட்ட வீரர்களுக்கு கிடைத்த ஒரு பேராயுதம். காந்தியடிகளின் சுதந்திரப் போராட்டக் கால சின்னமாகத் திகழும் கதர் ஆடைகளை அனைவரும் வாங்கி அணிய வேண்டியது, ஒவ்வொரு இந்தியரின் தலையாயக் கடமை என்று தெரிவித்தார்.

இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் ஜீவா, கதர் கிராமத்தொழில் வாரிய உதவி இயக்குனர் அலுவலகப் பணியாளர்கள், ஓய்வுபெற்ற பணியாளர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.