கோவையில் ‘கருப்பு’ திரைப்பட சிறப்பு காட்சி250 பக்தர்கள் கண்டு ரசித்தனர்.

ஒன்னிப்பாளையம் அருள்மிகு எல்லை கருப்பராயன் பக்தர்களுக்கான “கருப்பு” திரைப்பட சிறப்பு காட்சி கோவையில் உள்ள பிரபல திரையரங்கில் நடைபெற்றது.
பக்தி மற்றும் கிராமிய கலாசார பின்னணியில் உருவாகியுள்ள “கருப்பு” திரைப்படம், எல்லை கருப்பராயன் வழிபாட்டு மரபுகள், கிராம மக்கள் நம்பிக்கைகள் மற்றும் வீர உணர்வுகளை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை முன்னிட்டு ஒன்னிப்பாளையம் எல்லை கருப்பராயன் பக்தர்கள் சார்பில் சிறப்பு திரையிடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கோவை என் & டி பைபாஸ் சாலையில் அமைந்துள்ள திரையரங்கில் நடைபெற்ற இந்த காட்சிக்கு பக்தர்கள் பாரம்பரிய உடைகளில் ஆர்வமுடன் திரண்டனர். திரைப்படம் தொடங்குவதற்கு முன்பு கருப்பராயனுக்கு சிறப்பு பூஜையும், தீபாராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் முழக்கத்துடன் உற்சாகமாக திரைப்படத்தை வரவேற்றனர்.
திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த காட்சிகள், கருப்பசாமி வேடங்கள், பக்தி சார்ந்த காட்சிகள் மற்றும் ஆக்ஷன் காட்சிகள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. படம் முழுவதும் பக்தர்கள் ஆரவாரம் செய்து ரசித்தனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்கள் கூறுகையில், “கருப்பராயன் பெருமையை வெளிப்படுத்தும் வகையில் படம் உருவாகியுள்ளது. கிராமிய தெய்வ வழிபாட்டு மரபுகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் முயற்சியாக இது அமைந்துள்ளது” என்றனர்.
இந்த சிறப்பு திரையிடல் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒன்னிப்பாளையம் எல்லை கருப்பராயன் பக்தர்கள் குழுவினர் செய்திருந்தனர்.