கோவையில் ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் சைசிட்டியின் தலைவராக டாக்டர் ஆர். பாலமுருகன் பொறுப்பேற்பு விழா, கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள தனியார் உணவக அரங்கில் நடைபெற்றது.

கோவை டயாபெட்டீஸ் ஸ்பெஷாலிட்டி சென்டர் மற்றும் மருத்துவமனையின் நிறுவனர் மற்றும் மூத்த நீரிழிவு நோய் நிபுணரான டாக்டர் ஆர். பாலமுருகன், 2026 மற்றும் 2027-ஆம் ஆண்டிற்கான ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் சைசிட்டியின் தலைவராக பதவியேற்று கொண்டார் இதற்கான விழா, கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள தனியார் உணவக அரங்கில் நடைபெற்றது. இவருடன்,
கிளப்பின் செயலராக ரொட்டேரியன் ஜே. பாலாஜியும், பொருளாளராக ரொட்டேரியன் ராஜவேலும் பொறுப்பேற்றனர். தமிழக அரசின் மருத்துவம் மற்றும் ஊரக சுகாதாரப் பணிகள் துறையின் ஓய்வுபெற்ற இயக்குநர், எழுத்தாளர் மற்றும் பேச்சாளரான டாக்டர் ஜெ. ராஜமூர்த்தி தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டார். இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழக முன்னாள் தலைவர் மற்றும் ஹாஸ்பிட்டல் போர்டு ஆஃப் இந்தியாவின் தலைவர் டாக்டர் கே.எம். அபுல் ஹசன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். இந்திய மருத்துவ சங்க கோவை கிளையின் தலைவர் டாக்டர் பி. கோஷல்ராம் புதிய நிர்வாகக் குழுவை பாராட்டினார். மேலும், ரோட்டரி இன்டர்நேஷனல் மாவட்டம் 3206-இன் மாவட்ட இயக்குநர் ரொட்டேரியன் மணிவண்ணன், உதவி ஆளுநர் ரொட்டேரியன் தீபனா, ஜி.ஜி.ஆர். ரொட்டேரியன் துளசீது ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னாள் தலைவர் ரொட்டேரியன் ஹால்துரை மற்றும் முன்னாள் செயலர் ரொட்டேரியன் அனந்தகிருஷ்ணன் ஆகியோர் புதிய நிர்வாகத்திடம் பொறுப்புகளை முறையாக ஒப்படைத்தனர்.
இதுகுறித்து தனது ஆண்டு செயல்திட்டத்தை அறிமுகப்படுத்திய டாக்டர் ஆர். பாலமுருகன், செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது.. நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து தடுப்பதை மையமாகக் கொண்ட பல்வேறு சுகாதாரத் திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளதாகவும், மாவட்டம் முழுவதும் முன் நீரிழிவு, பரிசோதனை முகாம்கள் நடத்தப்படவுள்ளதாகவும், இந்திய மருத்துவ சங்கத்துடன் இணைந்து காலாண்டு தோறும் மருத்துவ நிபுணர்கள் பங்கேற்கும் பொதுமக்கள் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்காக “ரோட்டரி ஹெல்த் சீரிஸ்” தொடங்கப்பட உள்ளது என்றார்.
கிளப்பின் முக்கிய சேவைத் திட்டங்களாக பிறவியிலேயே இதயக் குறைபாடுகளுடன் பிறந்துள்ள, இந்தியா மட்டுமின்றி, இலங்கை, வங்கதேசம் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 1,500-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கடந்த 10 ஆண்டுகளில் ‘கிஃப்ட் ஆஃப் லைஃப்’ திட்டத்தின் மூலம் இலவச உயிர்காக்கும் இதய அறுவைச் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.