
கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலை உச்சியில் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பெருங்கற்காலத்திற்கு முற்பட்ட கோப்பை வடிவக் கற்குழிகள், கருவிகள் மற்றும் ஆயுதங்களை கூர் தீட்டும் கற்குழிகளை தொல்லியியல் ஆய்வாளர் முனைவர் ராஜேந்திரன் கண்டுபிடித்துள்ளதாகவும் அதனை தமிழ்நாடு அரசு தொல்லியல்துறையின் ஆய்வு மேற்கொண்டு ஆவணப்படுத்தி பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்த ஒரு செய்தித் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.
கோவை பி எஸ் ஜி கலை அறிவியல் கல்லூரியில் தமிழ் துறை உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருபவர் முனைவர் ராஜேந்திரன். தொல்லியல் துறையின் மீது கொண்ட ஈடுபாட்டின் காரணமாக அது குறித்து படித்து கடந்த 13 ஆண்டுகளாக தொல்லியல் ஆய்வு பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இதில் சிவகங்கை மாவட்டத்தில் 8 இடங்களில் பழங்கால தொல்லியல் கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து பதிவு செய்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது பணியாற்றி வரும் கல்லூரி சார்பில் வழங்கும் Seed Money என்ற நிதி மூலமாக ஆய்வுகள் சமர்பிக்கும் பொருட்டு கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலை பகுதியில் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
இங்கு மங்குனி, பசிமணி, பசுமணிபுதூர், குஞ்சூர்பதி, பெரும்பதி, பெருக்கபதிபுதூர் ஆகிய 6 கிராமங்கள் உள்ளன. அங்கே இருளர் பழங்குடி மக்கள் வசிக்கின்றனர்.
இங்கு 250 ஆண்டுகள் பழமையான பாலமலை அரங்கநாதர் ஆலயம் அருகே பெருங்கற்காலத்திற்கு முற்பட்ட கோப்பை வடிவக் கற்குழிகள், கருவிகள் மற்றும் ஆயுங்களை கூர் தீட்டும் கற்குழிகளை கண்டுபிடித்துள்ளார்.
இது தொடர்பாக அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பல்வேறு தொல்லியல் துறை ஆய்வாளர்கள் பூங்குன்றன், கல்வெட்டு ஆய்வாளர் ஜெகதீசன் மற்றும் கல்வெட்டுக்களை ஆய்வு செய்து ஆவணப்படுத்தி வரும் கோவை யாக்கை மரபு அறக்கட்டளையினர் ஆகியோரிடம் காண்பித்து அதனை உறுதி செய்துள்ளார்.
இது குறித்து ராஜேந்திரன் கூறும்போது கோவை புறநகர் பகுதியில் பெரியநாயக்கன்பாளையம், புதூர், காளப்பட்டி, பெருங்குடி, சின்னங்காவு, ரோமாநிய குன்றுகள், தீர்த்தக்கோடு போன்ற பகுதிகளில் இதற்கு முன்பே பல்வேறு தொல்லியல் சான்றுகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும்.
பாலமலை வனப்பகுதியில் 3 அடி உயரமும் 7 அடி நீளமும் கொண்ட சாம்பல் நிறப் பாறையில் சுமார் 22க்கும் மேற்பட்ட கோப்பை வடிவக் கற்குழிகள் கண்டுபிடித்துள்ளதாகவும், இக்குழிகள் 3 முதல் 10 செ.மீ. ஆழமும், 1 முதல் 7 செ.மீ. அகலமும் கொண்டவையாக இருப்பதாகவும்.
இதேபோன்று நாட்டின் பல பகுதிகளிலும் உலகின் பல நாடுகளிலும் இத்தகைய கோப்பை வடிவக் கற்குழிகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும். இந்த கற்குழிகள் உருவாக்கப்பட்டதற்கான உண்மையான காரணங்களை கண்டறிய முடியவில்லை என்றாலும், அந்த இடம் புனித தளமாகவோ, வானியல், மருத்துவ,ம் வேட்டை, வெற்றி உள்ளிட்டவைகளின் குறியீடுகளாகவும் இருக்கலாம்.
இந்த கற்குழிகளுக்கு அருகே மூன்று அடி உயரமும் 7 அடி நீளமும் கொண்ட சாம்பல் நிறப் பாறையில் கல்லாயுதங்களை கூர்மைப்படுத்த பயன்படுத்தப்பட்ட 12 தேய்ப்பு குழிகள் கண்டறிந்துள்ளதாகவும், இச்சான்று புதிய கற்கால கருவிகளை பயன்படுத்திய மக்கள் பாலமலையில் வாழ்ந்திருக்கலாம் என்பதை உறுதிப்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இதற்கு அருகே 3 அடி அகலமும் 11 அடி நீளம் கொண்ட பாதையின் மேற்பரப்பில் 15 சென்டிமீட்டர் வட்டமும் 16 சென்டிமீட்டர் ஆழமும் கொண்ட குழி ஒன்று கண்டறிந்துள்ளதாகவும், இக்குழி பழங்கால மனிதர்களின் வாழ்வியல், சமயச் சடங்குகள், தானிய அரைத்தல், திரவங்கள் சேகரித்தல், வேட்டையாடும் போது உண்டான காயங்களுக்கு அல்லது காய்ச்சல் போன்ற பிற நோய்களுக்கு மருந்து அரைக்கும் குளியாக பயன்படுத்தி இருக்கலாம் என தெரிவித்தார்.
மேலும் அங்கிருந்து சற்று தொலைவில் உள்ள பாறையில் கற்குழிகள் அருகில் கூர்மையான மற்றும் உருளை வடிவ கருவிகளை கடவுளாக வழிபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

புதிய கற்கால தரவுகள் கொங்கு மண்டலத்தில் ஒரு சில இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும், கோப்பை வடிவ கற்குழி இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதற்கான பதிவுகள் இல்லை. இத்தகைய தொல்பழங்கால சான்றுகளை தன்னகத்தை கொண்டுள்ள பாலமலையின் கீழே கோவனூர் மலையில் 4000 ஆண்டுகளுக்கு பழமையான பாறை ஓவியங்கள் உள்ளன. இதனை தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டு உறுதி செய்து ஆவணப்படுத்தியுள்ளனர்.
எனவே இந்த தரவுகள் பாலமலை சுற்றுவட்டார பகுதியில் வரலாற்று காலத்திற்கு முன்பு இருந்தே தொல்பழங்கால மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதற்கு சான்றுகளாக அமைகின்றன. ஆகவே இதுகுறித்து மேலும் ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டிய அவசியம் இருப்பதாகவும், புதிதாக கண்டறியப்பட்ட இக்கற்குழிகள் கோவை வட்டாரத்தின் தொல்லியல் வரலாற்றில் முக்கிய இடம் பெறும் எனவே தமிழ்நாடு தொல்லியல் துறை இவ்விடங்களை முழுமையாக ஆய்வு செய்து ஆவணப்படுத்தி பாதுக்காக்க வேண்டும் என தொல்லியல் ஆய்வாளர் முனைவர் ராஜேந்திரன் கோரிக்கை எடுத்துள்ளார்.
