
கோவை அவினாசி சாலையில் உள்ள அரசினர் தொழில்நுட்ப கல்லூரியில்
ஜூன் 3 ம் தேதி முதல் 5ம் தேதி வரை, மூன்று நாட்கள் நடைபெறும் சர்வதேச தூய்மை எரிசக்தி மற்றும் சுகாதார தொழில்நுட்பம் குறித்த மாநாட்டின் துவக்க விழாவில், இந்தியா, நார்வே, இலங்கை, தென்கொரியா, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்று, பொருட்கள் அறிவியல், சுத்தமான எரிசக்தி தொழில்நுட்பங்கள் மற்றும் சுகாதாரப் பயன்பாடுகள் தொடர்பான முன்னேற்றங்கள் குறித்து விவாதித்தனர்.
இந்த மாநாட்டை இந்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி மன்றத்தின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் என். கலைச்செல்வி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து, மாநாட்டு ஆய்வுக் கட்டுரைகள் தொகுப்பை வெளியிட்டு தொடக்க உரையாற்றினார்.
தொடக்க நிகழ்ச்சிக்கு சிஐடி கல்வி நிறுவனங்களின் தலைவர் மற்றும் தாளாளர் சந்தோஷ் மற்றும் நார்வேயின் ஹெச்விஎல் பல்கலைக்கழக பேராசிரியர், குன்னார்யிட்ரி ஆகியோர் தலைமை வகித்தனர். சிஐடி முதல்வர் டாக்டர் அ. ராஜேஸ்வரி வரவேற்புரையாற்றினார். மாநாடு குறித்த அறிமுக உரையாற்றிய மாநாட்டு தலைவர் டாக்டர் தயாளன் வேலாயுதப்பிள்ளை, கல்வி மற்றும் ஆராய்ச்சி துறைகளில் சர்வதேச ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். ஹெச்விஎல் தற்போது இந்தியாவில் ஒன்பது கல்வி நிறுவனங்களுடனும், இலங்கையில் ஐந்து கல்வி நிறுவனங்களுடனும் இணைந்து செயல்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். எதிர்கால எரிசக்தி சவால்களை எதிர்கொள்ள உலகளாவிய ஒத்துழைப்பு அவசியம் என்றும், இந்தியா மற்றும் நார்வே ஆராய்ச்சி கூட்டாண்மைகள் மேலும் வலுப்பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது
