
கோவை கவுண்டர் மில்ஸ் பகுதியில் உள்ள, கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டுவிழா அக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இவ்விழாவில் கல்லூரியின் செயலா் மற்றும் இயக்குநா் டாக்டர் சி.ஏ. வாசுகி தலைமையுரையாற்றினார். கல்லூரியின் முதல்வா் முனைவா் வே. சங்கீதா ஆண்டறிக்கை வாசித்தார். முன்னதாகக் கல்லூரியின் மாணவா் பேரவைத் தலைவா் செல்வி எஸ். தொம்னிக் லித்வினா வரவேற்புரையாற்றினார் இவ்விழாவில் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தரும் சென்னை, சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் இயக்குநருமான டாக்டர் சுதா சேஷய்யன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுச் சிறப்புரையாற்றினார். அவா்தம் உரையில் கூறியதாவது.. “மாணவ – மாணவியா் தங்களின் பொறுப்பை உணர்ந்து செயல்படவேண்டும் என்றும் கடமையிலிருந்து பின்வாங்காமல் சவால்களை மகிழ்ச்சியுடன் எதிர்கொண்டு எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். ஒருவா் நலமுடன் இருப்பது என்பது உடல், மனம், சமுதாயம், ஆன்மீகம் ஆகிய நான்கிலும் நலமுடன் இருப்பதையே குறிக்கும் என்றும் நேரமேலாண்மை மனஅழுத்தத்தைக் குறைக்கும் என்றும் குறிப்பிட்டார். பெற்றோர்கள் மற்றும் குடும்ப உறுப்பினா்கள் செய்த உதவிகளையும் ஆசிரியா்களின் பங்களிப்பையும் நாள்தோறும் நினைத்துப் பார்ப்பதுடன் புனிதம் மிக்க இந்திய மண்ணில் பிறந்ததை நினைத்துப் பெருமைப்பட வேண்டும்” என்றும் வலியுறுத்தினார்.
ஆய்வுகளில் சிறந்து விளங்கிய பேராசிரியா்களுக்குச் சிறப்பு விருந்தினா் சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினார். முதல் மதிப்பெண் பெற்ற மாணாக்கா்களுக்குச் சான்றிதழ்களையும் சிறந்த துறை, சிறந்த ஆராய்ச்சித்துறை ஆகியவற்றுக்கான சுழற்கோப்பைகளையும் நூல்கள், ஆய்விதழ்களில் கட்டுரைகளை எழுதிய பேராசிரியா்களுக்குச் சான்றிதழ் மற்றும் ஊக்கத் தொகைகைளையும் கல்லூரியின் செயலா் மற்றும் இயக்குநா் டாக்டர் சி.ஏ. வாசுகி வழங்கினார். அதனைத் தொடா்ந்து மாணவா் பேரவையின் செயலா் செல்வன் பி. பவன் கிருஷ்ணன் நன்றியுரையாற்றினார். விழாவின் நிறைவில் மாணாக்கா்களின் கண்கவா் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
