
பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில், கோவை பந்தயசாலையில், புடவை கட்டு, நடையை கட்டு என்ற தலைப்பில் ரேடியோ சிட்டி சார்பாக விழிப்புணர்வு வாக்கத்தான் நடைபெற்றது.
இந்த நிகழ்வில், சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் தமிழர்களின் பாரம்பரிய உடையான, புடவை அணிந்து கலந்து கொண்டனர், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் நடைபெற்ற இந்த நடைபயணத்தை கோவை மாநகர காவல் ஆணையர் சரவணன் சுந்தர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சமூக அமைப்புகள், மாணவிகள், பல்வேறு துறைகளின் பெண்கள் எனப் பெருமளவு மக்கள் பங்கேற்று, பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தினர்.
பெண்களின் கண்ணியம், மரியாதை, பாதுகாப்பு ஆகியவற்றை சமூகத்தில் வலியுறுத்தும் வகையில் நடைபெற்ற இந்த வாக்கத்தான், கோவை மக்களின் கவனத்தை ஈர்த்தது. முன்னதாக காவல்துறையில் பெண்களுக்காக செயல்பட்டு வருகின்ற போலிஸ் அக்கா என்ற திட்டத்தின் கீழ் பணியாற்றும் பெண் காவலர்கள், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க பல்வேறு பாடு பட்டவர்கள், பெண்களின் முன்னேற்றத்துக்காக பாடுபட்ட பெண் காவலர்கள் என அனைவருக்கும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கோவை மாநகர துணை ஆணையர் திவ்யா பாராட்டுக்களை தெரிவித்து பரிசுகளும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கி பெருமை படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
