திருப்பத்தூர் அருகே ஆதியூர் பகுதியில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு கழிவுநீர் கால்வாய் அமைக்க பூமிபூஜை போடப்பட்ட நிலையில் சகோதரர்கள் இரண்டு பேர் பணிசெய்ய விடாமல் தடுத்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்குட்பட்ட ஆதிவூர் பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 2007 ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவர் 20 அடி அகலமும் 100 அடி தொலைவும் கொண்ட தனக்கு சொந்தமான இடத்தை பொது வழியாக பொதுமக்கள் பயன்படுத்தி கொள்வதற்காக முறைப்படி பட்டாபதிவு செய்து கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் அப்பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் கால்வாய்வசதி இல்லாததால் மழைக்காலங்களில் மழைநீர் குடியிருப்பு பகுதிகள் செல்வதால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருவதாகவும் இதன் காரணமாக தங்கள் பகுதிக்கு கழிவுநீர் கால்வாய் அமைத்து தர வேண்டும் என திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்த நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு பதினைந்தாவது நிதி குழு மானியத்திலிருந்து ரூபாய் 4.75 லட்சம் மதிப்பில் புதிய கழிவுநீர் கால்வாய் அமைப்பதற்காக பூமி பூஜை போடப்பட்டது.

இந்த நிலையில் ரமேஷின் சகோதரர்களான மணிவண்ணன் மற்றும் ஜெகதீசன் இங்கு கழிவு நீர்கால்வாய் அமைக்க கூடாது எனவும் கழிவுநீர் அமைக்கக்கூடிய இடம் தங்களுக்கு சொந்தமானது எனவும் பிரச்சனையை செய்து வருவதால் அப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட முடியாமல் உள்ளது.

ஏற்கனவே கடந்த 2007 ஆம் ஆண்டு ரமேஷ் அந்த இடத்தை பொது வழி யாக பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என பத்திர பதிவு செய்து கொடுத்துள்ள நிலையில் தற்போது அவருடைய சகோதரர்கள் இரண்டு பேர் பணிசெய்ய விடாமல் தடுத்து வருவதால் ஆத்திரமடைந்த அப்பகுதிமக்கள் இன்று திடீரென திருப்பத்தூரில் இருந்து ஆதியூர் செல்லும் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருப்பத்தூர் கிராமிய போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதின் பேரில் அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.