
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ் அவர்களைப் பணி இடமாற்றம் செய்யக் கோரி, தலித் விடுதலை இயக்கத்தின் மாநிலத் தலைவர் ச.கருப்பையா, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் தலைமைச் செயலாளரிடம் மனு அளித்துள்ளார்.திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 12 வட்டாரங்களிலும் வசிக்கும் பட்டியலின மக்களுக்கு மயான வசதி இல்லாமலும், இருக்கும் மயானங்களுக்குச் செல்ல முறையான சாலை வசதி இல்லாமலும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இறந்தவர்களின் உடல்களை விளைநிலங்கள் மற்றும் ஓடைகள் வழியாக எடுத்துச் செல்லும் அவல நிலை நீடிக்கிறது.
நீதிமன்ற உத்தரவு புறக்கணிப்பு: மோத்தக்கல் கிராமத்தில் பொதுப்பாதை வழியாக சடலங்களை எடுத்துச் செல்ல சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தும், மாவட்ட வருவாய்த்துறை அதற்கு மாறாகச் செயல்பட்டு தனிநபர் நிலங்களைக் கையகப்படுத்தி மாற்றுப் பாதை அமைப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
18 ஆண்டுகால தாமதம்: பாலியப்பட்டு கிராமத்தில் 2007-ம் ஆண்டு அமைதிப் பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவுகள் 18 ஆண்டுகள் கடந்தும் இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதேபோல் நூக்காம்பாடி கிராமத்தில் 2010 முதல் பலமுறை மனு அளித்தும் மயான ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை.
