
ராமநாதபுரம் நகர்மன்றக்கூட்டம் தலைவர் ஆர்.கே.கார்மேகம் தலைமையில் நேற்று நடந்தது. ஆணையாளர் அஜீதா பர்வீன்,துணைத் தலைவர் டி.ஆர்.பிரவீன் தங்கம்,நகர் நல அலுவலர் டாக்டர்.ரத்தினக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு பின் கூட்டம் துவங்கியதும் 21-வது வார்டு தி.மு.க கவுன்சிலர் டி.ராமசுப்ரமணியன்(எ) டிஆர்எஸ் அய்யனார்,கடந்த 17-ம் தேதி நடந்த ராமநாதபுரம் நகராட்சி புதிய பேருந்து நிலைய வளாகத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள கடைகளை குத்தகை உரிமம் ஏலம் எடுத்ததில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன.வியாபாரிகள்,பொதுமக்கள் யாரிடமும் வரைவோலை வாங்காமல் வேண்டப்பட்டவர்களுக்கு கடைகள் ஒதுக்கப்பட்டுள்ளது.இதனால் அரசிற்கு பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.இதனால் அக்கடைகளின் குத்தகை உரிமம் ஏலத்தை ரத்து செய்து மறு ஏலமிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கூட்டத்தில் வெளி நடப்பு செய்தார்.ராமசுப்ரமணியன் தனது தரப்பு கோரிக்கை குறித்து பேசிக் கொண்டிருந்தபோது ஏனைய தி.மு.க கவுன்சிலர்கள் தங்கள் மேஜைகளை தட்டி ஒலி எழுப்பி ராமசுப்ரமணியன் பேசுவதை தடுத்தனர்.இருப்பினும் தனது கோரிக்கை தொடர்பாக உரத்த குரல் எழுப்பி ராமசுப்ரமணியன் வெளி நடப்பு செய்தார்.மேலும் தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நல்லாட்சி நடத்திக் கொண்டிருக்கையில் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் ராமநாதபுரம் நகராட்சி நிர்வாகம் ஊழலில் திளைத்துள்ளது.

புதிய பேருந்து நிலைய கடைகள் ஏலம் தொடர்பாக இன்னும் ஒரு வார காலத்தில் என்ன முறைகேடு நடந்துள்ளது என்பதையும் தெரிவிக்கிறேன் என்றும் செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.இதை தொடர்ந்து கூட்ட பொருள்களை முறையாக வாசிக்காமல் பொருள் 1,பொருள் 2 என ஏலமிடுவது போல் அடுக்கி கொண்டே போனார்.அப்போது பா.ஜ.க கவுன்சிலர் ஜி.குமார் 28-வது பொருள் குறித்து விளக்கம் கோரினார்.அதற்கு ஏனைய கவுன்சிலர்கள் தி.மு.க மேஜைகளை தொடர்ந்து தட்டி ஒலி எழுப்பினர்.குமார் கேட்ட கேள்விக்கு பிற தி.மு.க கவுன்சிலர்கள்
பதிலளித்தனர்.இதனால் கூட்டத்தில் கூச்சல்,குழப்பம் நிலவியது.குமாருடன் பிற தி.மு.க கவுன்சிலர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்த போது 36 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக தலைவர் ஆர்.கே.கார்மேகம் அறிவித்தார்.ஆனாலும் தொடர்ந்து நிலவிய கூச்சல்,குழப்பத்தை முடிவுக்கு கொண்டு வர தேசிய கீதம் பாடப்பட்டதால் தலைவர்,துணைத் தலைவர்,ஆணையாளர்,கவுன்சிலர்கள் மற்றும் நகராட்சி பணியாளர்கள் அனைவரும் அமைதி காத்தனர். தேசிய கீதம் நிறைவடைந்ததும் கவுன்சிலர்கள் கூட்ட அரங்கில் இருந்து வெளியேறினர்.
வெளிநடப்பு செய்த பா.ஜ.க கவுன்சிலர் ஜி.குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
புதிய பேருந்து நிலைய கடைகள் ஏலத்திற்கு 3 நாட்கள் முன்னதாக நகராட்சி அலுவலகத்தில் ஆணையாளர் உட்பட யாருமே இல்லை.ஆனால் ஏலத் தேதியான 17-ம் தேதியன்று 162 நபர்களிடம் வரைவோலை வாங்கி ஏலமிட்டுள்ளனர்.கடந்த 14,15,16 ஆகிய 3 தேதிகளில் நகராட்சி எங்கு செயல்பட்டது என்று கேள்வி கேட்டால் நகர்மன்ற தலைவர் தி.மு.க கவுன்சிலர்களை வைத்து எதிர்ப்பு தெரிவித்து என்னை பேச விடாமல் தடுக்கிறார்.இது குறித்து எனக்கான நியாயத்தை நீதிமன்றம் மூலம் தேட உள்ளேன்.நகர்மன்றம் தொடங்கிய நாளிலிருந்து தற்போது வரை பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
