உலக சைக்கிள் தினத்தை முன்னிட்டு போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு, பெண்கள் பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.இதில், சமூகத்தில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் ஆண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.

உலக சைக்கிள் தினத்தை முன்னிட்டு, கோவையில் போதைப்பொருட்களுக்கு எதிராகவும், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தியும் குழந்தைகள், சமூக ஆர்வலர்கள் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி மேற்கொண்டனர். ஆண்டுதோறும் ஜூன் 3-ஆம் தேதி உலக சைக்கிள் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த சைக்கிள் தினத்தை முன்னிட்டு கோவையில் சமூக ஆர்வலர்கள், சிறார்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது. தமிழ்நாட்டில் போதைப்பொருள் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டியும், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தியும் நடைபெற்ற இந்த சைக்கிள் பேரணியை துணை ஆட்சியர் ஹரிப்பிரியா, காவல் துணைக் கண்காணிப்பாளர் காயத்ரி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்து, சைக்கிள் பேரணியிலும் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து பேசிய சைக்கிள் பந்தய வீரரும் சமூக ஆர்வலருமான ஜி.டி. விஷ்ணு ராம், “போதைப்பொருள் சமூகத்தில் ஒழிக்க வேண்டிய ஒன்று. இதனை பயன்படுத்துவோருக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிப்புகள் ஏற்படுகின்றன. இது அவர்களைக் கடந்து, சமூகத்திற்கும் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்துகின்றன. இதனால் பெண்களுக்கும் மற்றும் பெண் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகிறது. எனவே போதைப்பொருள் கலாச்சாரத்தை தடுக்கும் விதமாகவும், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தியும் இன்று நாங்கள் சைக்கிள் பேரணி மேற்கொண்டோம். இந்த சமூகத்தில் பெண்களுக்கு ஆண்கள் பாதுகாப்பாக இருக்கவும், போதை பொருள் தடுப்பில் ஈடுபட்டு, ஒழுக்கத்தை கட்டமைக்கின்ற விளையாட்டில் ஆர்வம் செலுத்த வேண்டும் என வலியுறுத்துகிறோம். கோவை நவஇந்தியா பகுதியில் தொடங்கிய எங்கள் சைக்கிள் பேரணி கருமத்தம்பட்டி வரை சென்று மீண்டும் இதே பகுதியில் நிறைவடைந்தது. 50 கிலோமீட்டர் தூரம் நடைபெற்ற இந்த பேரணியில் பங்கேற்றவர்களுக்கு பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.” இவ்வாறு விஷ்ணு ராம் கூறினார்.