
கோவை காட்டூர் பகுதியில் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் ட்ரீம் சிறப்புப் பள்ளி செயல்பட்டு வருகிறது. 2023ம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்பள்ளியில் சுமார் 90 சிறப்புக் குழந்தைகள் பயிற்சி பெற்று வருகின்றனர். இக்குழந்தைகளுக்கு இங்கு முறையான பிசியோதெரபி, பேச்சுத் தெரபி, விஷன் தெரபி, ஹைட்ரோ தெரபி, சிறப்புக் கல்வி, ஸ்கில் டெவலப்மென்ட் டிரெயினிங், மியூசிக், நடனப் பயிற்சி, ஆர்ட்ஸ் மற்றும் கிராஃப்ட்ஸ் உள்ளிட்ட பல பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் இன்று, “காமராஜரின் கல்விக் கனவு மாற்றுத்திறனாளி குழந்தைகளையும் சென்றடைகிறதா?” என்ற கேள்வியை தமிழக அரசுக்கு இப்பள்ளியின் சார்பாக கேள்வி எழுப்பியுள்ளனர்.
பெருந்தலைவர் காமராஜரின் 124-வது பிறந்தநாளை முன்னிட்டு, டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் ட்ரீம் சிறப்புப் பள்ளி மற்றும் மறுவாழ்வு மையம் சார்பில் காமராஜர் தின விழா சிறப்பாக நடைபெற்றது.
விழாவில் உரையாற்றிய நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் ஜெயபிரபா, தமிழக அரசுக்கு ஒரு கோரிக்கையை விடுத்தார்.
“காமராஜர் ‘ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வி’ என்ற கொள்கையை உருவாக்கினார். இன்று அந்த ‘ஒவ்வொரு குழந்தை’ என்ற வார்த்தையில் மாற்றுத்திறனாளி குழந்தைகளும் உள்ளனரா?” என்று கேள்வி எழுப்பினார்.
அரசுப் பள்ளிகளுக்கு அரசு உள்ளது. தனியார் பள்ளிகளுக்கு கட்டண வருவாய் உள்ளது. ஆனால், ஏழை மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு இலவசமாக கல்வி, சிகிச்சை, மறுவாழ்வு, உணவு, போக்குவரத்து வழங்கும் சிறப்புப் பள்ளிகள் எதை நம்பி இயங்க வேண்டும்? எனவும், காமராஜர் தற்போது வாழ்ந்திருந்தால், இத்தகைய பள்ளிகள் நிதியின்றி போராட அனுமதித்திருப்பாரா? எனவும், இது எங்களின் குற்றச்சாட்டு அல்ல; தமிழக அரசிடம் எங்களின் மனப்பூர்வமான கேள்வி என்றார்.
தமிழக அரசு சிறப்புப் பள்ளிகளுக்கான நிரந்தர நிதியுதவி, சிறப்பாசிரியர்கள் மற்றும் சிகிச்சை நிபுணர்கள் நியமனம், உள்கட்டமைப்பு மேம்பாடு, மாணவர் நலத்திட்டங்கள் மற்றும் செயல்பாட்டு மானியங்களை வழங்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
காமராஜரின் புகைப்படத்திற்கு மாலை அணிவிப்பதைவிட, அவரது கல்விக் கொள்கையை மாற்றுத்திறனாளி குழந்தைகளின் வாழ்க்கையில் நடைமுறைப்படுத்துவதே உண்மையான மரியாதை. “தமிழக அரசே, காமராஜரின் கனவை முழுமையாக்குவோம்” என்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
