
● இந்தியாவில் முதல்முறையாக, மீனாட்சி மிஷன் மருத்துவமனை ‘ஆன்டி-குளோமருலர் பேஸ்மென்ட் மெம்பிரேன்’ (Anti-Glomerular Basement Membrane) என்று அழைக்கப்படும் சிறுநீரக நுண்குழலில் வரும் அரிய நோய்க்கு சிகிச்சை அளிக்க மோனோக்ளோனல் ஆன்டிபாடி சிகிச்சையை வெற்றிகரமாக பயன்படுத்தியுள்ளது. இதன் மூலம் சிறுநீரகம் மீண்டும் செயல்படத் தொடங்கியதால், டயாலிசிஸ் சிகிச்சையிலிருந்து நோயாளி விடுபட்டிருக்கிறார்.
● ஒரு முறை டயாலிசிஸ் செய்ய சுமார் 120 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் தேவைப்படுகிற நிலையில், சுற்றுச்சூழலுக்கு உகந்த சிறுநீரக சிகிச்சை மற்றும் நோயை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை அளிப்பதன் அவசியத்தை நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
உலக சிறுநீரக தினம் மார்ச் 12, 2026 அன்று அனுசரிக்கப்படவிருப்பதை முன்னிட்டு பத்திரிக்கையாளர்களிடம் பேசிய மருத்துவமனையின் சிறுநீரகவியல் துறையின் தலைவர் மற்றும் முதுநிலை நிபுணர் டாக்டர் K. சம்பத்குமார், சிறுநீரக அறுவைசிகிச்சை பிரிவின் தலைவர் மற்றும் முதுநிலை நிபுணர் டாக்டர் R. ரவிச்சந்திரன் மற்றும் மருத்துவ நிர்வாகி டாக்டர். B. கண்ணன் ஆகியோர் இது குறித்து விளக்கினர். “இந்தியாவில் சிறுநீரக நோய்க்கு முக்கிய காரணமான IgA நெஃப்ரோபதி போன்ற சிறுநீரக நோய் பாதிப்புகளுக்கு சிகிச்சையளிக்க 2025-ல் அங்கீகரிக்கப்பட்ட GLP-1 அனலாக்ஸ், மோனோக்ளோனல் ஆன்டிபாடி மற்றும் எண்டோதெலின் ரிசப்டர் அன்டகோனிஸ்டுகள் போன்ற புதிய மருந்துகள் பெரும் திருப்புமுனையாக அமைந்துள்ளன,” என்று அவர்கள் கூறினர்.
“இம்மருந்துகள் சிறுநீரக நோய் தீவிரமடைவதை தாமதப்படுத்துவது மட்டுமின்றி, நோயை முழுமையாக குணப்படுத்தும் நிலையை நோக்கி சிறுநீரக சிகிச்சை முன்னேற்றம் அடைந்து வருவதை குறிக்கின்றன. புதிய மருந்துகள் மற்றும் கூட்டு மருந்து சிகிச்சைகள் மட்டுமின்றி, நோயை முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் ஆபத்துகளை வகைப்படுத்துதல் போன்றவற்றால், பல நோயாளிகளுக்கு சிறுநீரக செயல்பாட்டைப் பாதுகாப்பதும், சிறுநீரில் புரதக் கசிவை (அல்புமினூரியா) சரிசெய்வதும் சாத்தியமாகியுள்ளது. சிறுநீரக மருத்துவத்தில் இது ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும்”, என்று அவர்கள் தெரிவித்தனர்.
டாக்டர் சம்பத்குமார் பேசுகையில், “இரத்தத்தை சுத்திகரிக்க உதவும் சிறுநீரகத்தின் மெல்லிய வடிகட்டும் அடுக்கான ‘குளோமருலர் பேஸ்மென்ட் மெம்பிரேன்’ (GBM) பாதிக்கப்படும் ஒரு அரிய நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு, நாட்டிலேயே முதல்முறையாக எங்கள் மருத்துவமனையில் புதிய மோனோக்ளோனல் ஆன்டிபாடி சிகிச்சை அளிக்கப்பட்டது. வழக்கமான சிகிச்சைகள் பலனளிக்காமல், சிறுநீர் வெளியேறாமல் கடுமையான சிறுநீரக செயலிழப்பு நோயாளிக்கு இருந்தபோது, எக்குலிசுமாப் என்ற ஆன்டிபாடி மருந்து மூலம் சிகிச்சை வழங்கப்பட்டது. இரண்டு கட்ட சிகிச்சைக்குப் பிறகு, நோயாளியின் சிறுநீர் வெளியேற்றம் கணிசமாக மேம்பட்டதால், டயாலிசிஸ் சிகிச்சை அவசியத்திலிருந்து அவர் படிப்படியாக விடுபட்டார்,” என்று கூறினார்.
2026 உலக சிறுநீரக தினத்தின் மையக்கருத்தான “அனைவருக்கும் சிறுநீரக ஆரோக்கியம்: மக்களைப் காப்போம் , பூமியைப் பாதுகாப்போம்” என்பது குறித்து பேசிய டாக்டர் ரவிச்சந்திரன், “சிறுநீரக ஆரோக்கியத்திற்கும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கும் உள்ள தொடர்பை வலியுறுத்தும் இந்த மையக் கருத்து, பருவநிலை மாற்றமும், மாசுபாடும் எவ்வாறு வெப்ப அழுத்தம் மற்றும் நச்சுகள் மூலம் சிறுநீரக பாதிப்பை அதிகரிக்கிறது என்பதை உணர்த்துகிறது,” என்றார்.
“அதிகரித்து வரும் உலகளாவிய வெப்பநிலை மற்றும் நீண்ட நேரம் வெப்பத்தில் இருப்பது வெப்ப அழுத்தம் மற்றும் நீர்ச்சத்துக் குறைபாட்டை ஏற்படுத்துகிறது. இந்த இரண்டுமே சிறுநீரகங்களுக்கு கடுமையான அழுத்தத்தை அளித்து நேரடி பாதிப்பை ஏற்படுத்தலாம். இது நாளடைவில் ‘காரணம் அறியப்படாத நாள்பட்ட சிறுநீரக நோயாக’ (CKDu) மாறுகிறது. காற்றிலும், தண்ணீரிலும் உள்ள மாசுகள், மற்றும் பல்வேறு சுற்றுச்சூழல் நச்சுகள் காலப்போக்கில் சிறுநீரக பாதிப்பை அதிகரிக்கின்றன. சிறுநீரக ஆரோக்கியத்தை பராமரிக்க சுத்தமான குடிநீர் மிக அவசியம்; ஆனால் சுற்றுச்சூழல் மாற்றங்களால் அது கிடைப்பதும் சவாலாகி வருகிறது,” என்று அவர் மேலும் விளக்கமளித்தார்.
சிறுநீரகத்தைப் பாதுகாக்கும் ‘பொன்னான விதிகள்’: சிறுநீரக ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும், நாள்பட்ட சிறுநீரக நோய் (CKD) அபாயத்தைக் குறைக்கவும் பொதுமக்கள் பின்வரும் விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்று நிபுணர்கள் வலியுறுத்தினர்: சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துதல்: நீரிழிவு நோய் உள்ளவர்களில் பாதிப் பேருக்கு நாளடைவில் சிறுநீரக பாதிப்பு ஏற்படலாம் என்பதால், ரத்தச் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். இரத்த அழுத்தப் பராமரிப்பு: உயர் ரத்த அழுத்தம் சிறுநீரக செயலிழப்புக்கு ஒரு முக்கிய காரணம் என்பதால், ஆரோக்கியமான இரத்த அழுத்த அளவை கட்டுக்குள் வைக்க வேண்டும். வாழ்க்கை முறை மாற்றம்: தவறாமல் செய்யும் உடற்பயிற்சி, குறைந்த உப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்த்த சமச்சீரான உணவு முறை, மற்றும் ஆரோக்கியமான உடல் எடையை பராமரிப்பது அவசியம்.
போதிய அளவு தண்ணீர் குடிப்பது சிறுநீரகங்கள் நச்சுகளை வெளியேற்றவும், சிறுநீரகக் கற்கள் உருவாகும் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது (தீவிர சிறுநீரக நோய் உள்ளவர்கள் மருத்துவர்களின் அறிவுரைப்படி திரவ உணவுகளை உட்கொள்ள வேண்டும்). சிறுநீரக திசுக்களை சேதப்படுத்தும் புகைப்பிடிக்கும் வழக்கத்தையும், இபுபுரூஃபன் போன்ற வலி நிவாரணிகளை அடிக்கடி பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும்; நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் அல்லது குடும்பத்தில் யாருக்கேனும் சிறுநீரக நோய் இருந்த வரலாறு போன்ற அதிக ஆபத்து உள்ள பிரிவினர், சீரம் கிரியேட்டினின் மற்றும் eGFR போன்ற இரத்தப் பரிசோதனைகள், மற்றும் சிறுநீர் பரிசோதனைகளை தவறாமல் குறித்த காலஅளவுகளில் செய்வதால், நோயை முன்கூட்டியே கண்டறிந்து, டயாலிசிஸ் செய்வதற்கான தேவையைக் குறைக்கலாம் என்று மருத்துவர்கள் குறிப்பிட்டன
